நெல் ஜெயராமனின் 3ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னையில் தனியார் அமைப்பு சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் மரக்கன்றுகளை நட்டு நினைவு தினத்தை அனுசரித்தனர்.
174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமனின் 3ம் ஆண்டு நினைவு தினம் சென்னை ராணி மேரி கல்லூரியில் எக்ஸ்னோரா இண்டர் நேஷனல் தலைவர் செந்தூர் பாரி தலைமையில் அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கிரீன் நீடா தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு, நல்லோர் வட்டம் தலைவர் பாலு, கல்லூரியின் (உதவி)முதல்வர் முனைவர் வரலெட்சுமி, கிரீன் டீம் தலைவர் மோகனசுந்தரம், எழுத்தாளர் வீரையன், சபரி சுப்ரமணியன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக் கொண்ட இயற்கை ஆர்வலர்கள் மண் வாசனை மேனகா, அனந்த் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
பின்னர், நெல் ஜெயராமனின் நினைவு தினத்தையொட்டி, நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர்கள் வனஜா தலைமையில் 1,000 பனை விதைகளும், மரக்கன்றுகளும் கல்லூரி வளாகத்தில் மாணவிகள் நட்டனர்.
மேலும், அங்கு வைக்கப்பட்டிருந்த நெல் ஜெயராமனின் திருவுருவ படத்திற்கு மாணவிகள், பேராசிரியர்கள், இயற்கை ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவரும் மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினர்.