மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ‘ஸ்கேன்’ சென்டரில் பெண் நோயாளிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக உதவிப்பேராசிரியர் ஒருவர் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்ட சம்பவம், அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கதிரியக்கவியல் துறையில் உதவிப்பேராசிரியராக சக்கரவர்த்தி பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த கோரிப்பாளையம் பழைய கட்டிடத்தில் இருந்த ஸ்கேன் சென்டரில், நோயாளிகளுக்கு ஸ்கேன் பார்த்து வந்தார். கடந்த வாரம் திடீரென்று அங்கிருந்து சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
கடந்த வாரம் 27ம் தேதி ஒரு பெண் நோயாளிகளுக்கு சக்கரவர்த்தி கர்ப்பப்பையில் கட்டிகள் இருப்பதாக கூறி அடிவயிற்றில் ஸ்கேன் பார்த்துள்ளார். அப்போது சக்கவர்த்தி தன்னிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக அந்த பெண் நோயாளி ஸ்கேன் மையத்தை விட்டு வெளியே ஓடி வந்ததாக கூறப்படுகிறது. நேரடியாக அந்த பெண் உறவினருடன் டீன் ரெத்தினவேலுவை பார்த்து முறையிட்டுள்ளார். மேலும், டாக்டர் சக்கரவர்த்தி மீது எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார். டீன் ரெத்தினவேலு, அந்த புகாரை மருத்துவமனை விசாரணை குழுவுக்கு பரிந்துரை செய்துள்ளார்.
‘டீன்’ தலைமையிலான அந்த குழுவினர், கடந்த 3ம் தேதி வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்ட பெண்ணிடமும், குற்றம்சாட்டப்பட்ட உதவிப்பேராசிரியர் சக்கரவர்த்தியிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில், ஸ்கேன் செய்த பெண்ணிடம் உதவிப்பேராசிரியர் சக்கரவர்த்தி பாலியல் தொந்தரவு செய்ததாக விசாரணை குழு உறுதி செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க மருத்துவக்கல்வி இயக்குனருக்கு விசாரணை அறிக்கையை அனுப்பி வைத்தது. இந்நிலையில் மருத்துவக்கல்வி இயக்குனர் இன்று உதவிப்பேராசிரியர் சக்கரவர்த்தியை தற்காலிகமாக ‘சஸ்பெண்ட்’ செய்து உத்தரவிட்டார்.
இதுகுறித்து மருத்துவமனை உயர் அதிகாரியிடம் கேட்டபோது, ‘‘தற்போது முதற்கட்ட விசாரணையை அடிப்படையாக கொண்டு ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளார். இனி மருத்துவக்கல்வி இயக்குனர் விசாரணை மேற்கொள்வார். அதிலும் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூப்பிக்கப்பட்டால் குற்றச்சாட்டுக்கேற்றார்போல் 6 மாதம் அல்லது ஒரு ஆண்டு சஸ்பெண்ட் செய்யப்படுவார், ’’ என்றார்.
‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்ட சக்கரவர்த்தியிடம் கேட்டபோது, ‘‘நான் இதற்கு முன் ராமநாதபுரம், நாகப்பட்டினம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு வெளிமாவட்ட அரசு மருத்வமனைகளில் 24 ஆண்டுகாலம் பணிபுரிந்துள்ளேன். இதுவரை என் மீது பாலியல் குற்றசச்சாட்டு மட்டுமில்லாது எந்த ஒரு புகாரும் இல்லை. நான் மருத்துவப்பணியை தாண்டி, ஏழைகளுக்கு சேவை அடிப்படையில் குறைந்த கட்டணத்தில் ஸ்கேன் எடுக்கிறேன்.
கரோனா ஊரடங்கில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களுக்கு உதவிகள் செய்துள்ளேன். அரசு மருத்துவமனைக்கு சரியான நேரத்தில் வேலைக்கு செல்வேன். நேர்மையாக பணிபுரிவேன். அதுவே மற்றவர்களுக்கு நெருக்கடியையும் பிரச்சனையையும் உருவாக்கியது.
மருத்துவமனையில் நடக்கும் குற்றங்களையும், முறைகேடுகளையும் நோயாளிகளுக்கு ஆதரவாக தட்டி கேட்பேன். அதற்காகவே நான் மருத்துவமனையில் அதிகாரமிக்கவர்களை பகைத்துக் கொண்டேன். அவர்கள் இந்த சம்பவத்தை ஜோடித்து என்னை சிக்க வைத்துள்ளனர். இந்த குற்றச்சாட்டை சந்தித்து எந்த தவறும் செய்யவில்லை என்பதை நிரூபிப்பேன், ’’ என்றார்.
பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக மருத்துவர் உதவிப்பேராசிரியர் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்ட இந்த சம்பவம், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வட்டாரத்தில் பரபரப்பையும், மருத்துவமனை நிர்வாகத்திற்கு நெருக்கடியையும் ஏற்படுத்தி உள்ளது.