தமிழகத்தில் யாருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு இல்லை என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் இன்று செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
“உலகம் முழுவதும் 38 நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது. பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளிலிருந்து தமிழகம் வந்த 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 6 பேருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு இருக்கிறதா? எனப் பரிசோதனை செய்து பெங்களூரு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. இதன் பரிசோதனை முடிவில் 6 பேருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு இல்லை என்பது உறுதியானது.
வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 5,858 பேருக்கு இதுவரை ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 12 இடங்களில் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை நிலையங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன. ஒமைக்ரான் வைரஸ் குறித்து மக்கள் பெரிய அளவில் அச்சப்படத் தேவையில்லை. தடுப்பூசி குறைவாகப் போட்டுக்கொண்ட நாடுகளில்தான் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
ஊரடங்கு, கரோனா தொற்று போன்ற நிலைகளுக்குச் செல்லாமல் இருக்க தடுப்பூசிகளை முழுமையாகப் போட்டுக்கொள்ள வேண்டும்”.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.