தமிழகம்

புதுச்சேரியில் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு; மாலை அணிவித்து மாணவர்கள் வரவேற்பு: மதிய உணவு, மாணவர் பேருந்துக்கு கோரிக்கை

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரியில் 20 மாதங்களுக்கு பிறகு இன்று காலை (டிச 6 ஆம் தேதி) 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. ‌ அத்துடன் அரை நாள் மட்டுமே செயல்பட்டு வந்த 9 முதல் 12ம் வகுப்புகள், கல்லூரிகள் முழு நேரமாகவும் செயல்படத் தொடங்கின.

ஆனால், மாணவர் பேருந்துகள் இயக்கப்படாததால் பள்ளிக் குழந்தைகள் கடும் அவதி அடைந்தனர். மாணவர் பேருந்துகளுக்கான டெண்டர் இன்னும் இறுதி செய்யப்படாததால் பலரும் தனியார் பஸ்களில் தொங்கியபடி அபாய சூழலில் பள்ளி வந்தனர். அத்துடன் மதிய உணவை அனைத்து குழந்தைகளுக்களுக்கும் தர வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.



புதுச்சேரியில் கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக கடந்த 2020 மார்ச்சில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. கடந்த செப்டம்பரில் இருந்து 9 முதல் 12 ஆம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நடந்து வருகின்றன. அதையடுத்து நவம்பரில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை திறக்க முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக திறக்கமுடியவில்லை.

இந்நிலையில், பொதுமக்கள், ஆசிரியர்கள் பள்ளிகளைத் திறக்கக் கோரினர். தமிழகத்தில் வகுப்புகள் நடக்கும்போது புதுச்சேரியில் மட்டும் வகுப்புகள் நடக்காமல் இருந்தன.

இந்நிலையில் இருபது மாதங்களுக்கு பிறகு இன்று முதல் பள்ளிகள் முழுமையாகத் திறக்கப்பட்டன. 1 முதல் 12 ஆம் வகுப்புகள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நடக்கும். அதே நேரத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை அரை நேரமும், 9 முதல் 12 ஆம் வகுப்புகள், கல்லூரிகள் இன்று முதல் முழுநேரமும் செயல்படுகின்றன.

விழாக்கோலம் பூண்ட பள்ளிகள்:

பள்ளிகள் அனைத்தும் தூய்மை செய்யப்பட்டு குழந்தைகளை வரவேற்றன. கரோனா விதிமுறைகள் படி வெப்பநிலை பார்க்கப்பட்டு கிருமிநாசினி தரப்பட்டது. சில பள்ளிகளில் திருவிழா போல் வளாகமே அலங்காரம் செய்யப்பட்டு குழந்தைகள் வரவேற்கப்பட்டனர். முதல் முறை பள்ளி வரும் குழந்தைகளுக்கு மாலை அணிவித்து வரவேற்பு தந்தனர்‌.

முழு நேரம் இயங்கும் 9 முதல் 12ம் வகுப்பு வரை மட்டுமே மதிய உணவு தரப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை அரை நாள் மட்டுமே இயங்குவதால் மதிய உணவு இல்லை என்று தெரிவித்துள்ளனர். தற்போது ஒருநாள் விட்டு ஒரு நாள்தான் பள்ளிகள் என்பதால் அக்குழந்தைகளுக்கும் மதிய உணவு தருவதில் அரசுக்கு செலவு ஏதும் ஆகப்போவதில்லை. சில குழந்தைகள் நெடுந்தொலைவுக்கு மீண்டும் பசியுடன் திரும்பி செல்லவேண்டிய சூழல் ஏற்படும் என்று பலரும் குறிப்பிடுகின்றனர்.

SCROLL FOR NEXT