10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு, செயற்கை இழையிலான மேம்படுத்தப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதற்கு போதிய நிதி ஒதுக்கப்படாததால் திட்டத்தை செயல்படுத்துவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித் துறையில்பல்வேறு சீர்த்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக பொதுத்தேர்வு எழுதும் மாணவருக்கான மதிப்பெண் சான்றிதழ்களின் தரம்மேம்படுத்தப்படும் என்று தேர்வுத்துறை கடந்தாண்டு அறிவிப்பு வெளியிட்டது. அதேநேரம் இதற்கான நிதி ஒதுக்கீட்டில் நிலவும் தாமதத்தால் திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் நிலவுகிறது.
இதுகுறித்து தேர்வுத் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:
10, 11, 12-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்களின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்றுபல்வேறு தரப்பிலும் தொடர் கோரிக்கைகள் வந்தன. அதையேற்று எளிதில் கிழிந்துவிடாத மற்றும் நீரினால் சேதமடையாத வகையில் செயற்கை இழையிலான உயர்தரமிக்க மதிப்பெண் சான்றிதழ்களை 2020-21-ம் கல்வியாண்டு முதல் தயாரித்து வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான செலவீனம் ரூ.10.62 கோடி வரை எனமதிப்பிடப்பட்டு, பாடநூல் கழகம் மூலம் ஒப்பந்தம் கோரும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் கரோனா பரவலால் இந்த பணிகளில் கால தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து மாணவர்களின் உயர் கல்வியை கருத்தில்கொண்டு வழக்கமான நடைமுறையில் சான்றிதழ் அச்சிட்டு வழங்கப்பட்டன. தற்போது தொற்று பரவல்தணிந்து பள்ளிகள் திறக்கப்பட்டதை அடுத்து செயற்கை இழையிலான மதிப்பெண் சான்றிதழ்களை நடப்பு கல்வியாண்டில் அச்சிட்டு வழங்க தீர்மானிக்கப்பட்டது.
அதேநேரம் இந்த திட்டத்துக்கு நடப்பு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை. இதனால் இந்த கல்வியாண்டில் திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலை உள்ளது.இதுசார்ந்து அடுத்த கல்வியாண்டில் (2022-23) நிதி ஒதுக்கீடு கோரி சமர்பித்துள்ள கருத்துருவும் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள், போட்டித்தேர்வர்கள் சேதமடைந்த மதிப்பெண் சான்றிதழ்களை மாற்றித் தரக்கோரி விண்ணப்பிக்கின்றனர்.
அவை உடனடியாக கிடைப்பதில் சிக்கல் இருப்பதால் அவர்களின் உயர்கல்வி, வேலைவாய்ப்பு போன்ற எதிர்கால திட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, மாணவர்களின் நலன்கருதி இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு இந்தாண்டிலேயே திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆயிரக்கணக்கான மாணவர்கள், போட்டித்தேர்வர்கள் சேதமடைந்த மதிப்பெண் சான்றிதழ்களை மாற்றித் தரக்கோரி விண்ணப்பிக்கின்றனர்.