வெளிநாட்டு சொகுசுக் கப்பலில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.48.80 லட்சம் மோசடி செய்ததாக தனியார் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் உட்பட இருவரை போலீஸார் கைது செய்தனர்.
பள்ளிக்கரணையைச் சேர்ந்தவர் வினோத் (35). வெளிநாட்டு சொகுசுக் கப்பலில் தகுதிக்கேற்ப வேலை வாங்கித்தரப்படும் என்ற விளம்பரத்தை பார்த்து, இவர் நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள பிரபலமான தனியார் நிறுவனத்துக்கு நேர்காணலுக்கு சென்றுள்ளார்.
வினோத்தை நேர்காணல் செய்த அந்நிறுவன மேலாண்மை இயக்குநரான தூத்துக்குடி மாவட்டம், ராமசந்திரபுரத்தைச் சேர்ந்த ராஜா (35) மற்றும் அவரது உதவியாளர் பூந்தமல்லி பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த திவ்யபாரதி (27) ஆகிய இருவரும் வினோத்திடம் வெளிநாட்டு சொகுசு கப்பலில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 லட்சத்தை நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் செலுத்துமாறு கூறியுள்ளனர்.
அதன்படி கடந்த ஜனவரி மாதம் நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் அவர் பணம் செலுத்தியுள்ளார். ஆனால் பேசியபடி வேலைவாங்கி கொடுக்காமலும், பணத்தை திரும்ப கொடுக்காமலும் ஏமாற்றி வந்துள்ளனர். இதுகுறித்து வினோத் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து பண மோசடியில் ஈடுபட்டதாக ராஜா மற்றும் திவ்யபாரதி ஆகிய இருவரையும் கைது செய்தனர். இவர்கள் இருவரும் வெளிநாட்டு சொகுசு கப்பலில் வேலை வாங்கி தருவதாக கூறி 43 நபர்களிடம் சுமார் ரூ.48 லட்சத்து 80 ஆயிரம் வசூல் செய்து மோசடி செய்துள்ளது தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.