படூர் மற்றும் கேளம்பாக்கம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் வெள்ளநீர் வேகமாக வடிவதற்காக குடியிருப்பு பகுதிகளில் மூடு கால்வாய் மற்றும் ஓஎம்ஆர் சாலையின் குறுக்கே கால்வாய் அமைக்க திட்டமிட்டுள்ள நீர்வள ஆதாரத் துறை, இந்தப் பணிகளுக்காக ரூ.14.50 கோடி மதிப்பில் திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் பெய்த கனமழையால் திருப்போரூர் ஒன்றியம் படூர், புதுப்பாக்கம், தாழம்பூர், தையூர் ஏரிகளில் இருந்து உபரிநீர் வெளியேறி வருகிறது.
ஏரியின் உபரிநீர் வெளியேறும் கால்வாய்கள் முழுவதுமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் தண்ணீர் வெளியேற முடியாமல், படூர், கேளம்பாக்கம், தையூர், தாழம்பூர் பகுதிகளில் ஓஎம்ஆர் சாலையையொட்டி உள்ள ஏராளமான குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.
இதனால், படூர் பகுதியில் உள்ள ராதாகிருஷ்ணன் சாலை உட்பட பல்வேறு பகுதிகளில் சாலைகளின் குறுக்கே கால்வாய் அமைக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன்மூலம், வெள்ளநீர் கழுவேலிக்குச் சென்று பக்கிங்ஹாம் கால்வாயில் கலந்து வருகிறது.
ஓஎம்ஆர் சாலை முழுவதும் வெள்ளம் சூழ்ந்ததற்கு உபரிநீர் செல்லும் கால்வாய் ஆக்கிரமிப்புகள் காரணம் என்பதால், அவற்றை அகற்றி, கால்வாய் கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், குடியிருப்பு பகுதிகளில் மூடு கால்வாய் மற்றும் ஓஎம்ஆர் சாலையின் குறுக்கே கால்வாய்கள் அமைக்க, நெடுஞ்சாலை மற்றும் நீர்வள ஆதாரத் துறை சார்பில் ரூ.14.50 கோடி மதிப்பில் திட்ட மதிப்பீடு தயாரித்து அரசின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நீர்வள ஆதாரத் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: படூர் ஏரியின் உபரிநீர் தடையின்றி வெளியேறுவதற்காக ராதாகிருஷ்ணன் சாலையின் குடியிருப்பு பகுதியில் 3 அடி ஆழம், 18 அடி அகலத்தில் சுமார் 500 மீட்டர் தொலைவுக்கு மூடு கால்வாய், கேளம்பாக்கம் - வண்டலூர் இணைப்பு சாலை அருகே ஓஎம்ஆர் சாலையின் குறுக்கே 12 அடி அகலத்தில் ஒரு கால்வாய், தனியார் பொறியியல் கல்லூரி அருகே ஒரு புதிய கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பொறியியல் கல்லூரி வளாகத்தையொட்டி ஏற்கெனவே 3 அடி அகலத்தில் உள்ள கால்வாயை சுமார் 8 மீட்டர் அகலத்தில் மாற்றி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், ஓஎம்ஆர் சாலையைக் கடக்கும் வெள்ளநீர் தடையின்றி பக்கிங்ஹாம் கால்வாயில் கலப்பதற்காக கீழ் பகுதியிலும் கால்வாய் கட்டமைக்கப்பட உள்ளது. இதற்காக, நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.1.5 கோடி மற்றும் நீர்வள ஆதாரத் துறை சார்பில் ரூ.14.50 கோடியில் திட்டமதிப்பீடு தயாரித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
திட்டப்பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்பதால், கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றனர்.