கொடைக்கானல்-அடுக்கம் சாலையில் சுமார் 200 மீட்டர் தூரத்துக்கு சாலை நடுவே திடீர் பிளவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியே செல்லும் மலை கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கொடைக்கானலில் இருந்து அடுக்கம் வழியாக பெரியகுளம் செல்லும் மலைப் பாதை உள்ளது. இப்பாதை மழைக் காலத்தில் ஆபத்து நிரம்பியதாக உள்ளது. கனமழையால், அடுக்கம் சாலையில் பல இடங்களில் கடந்த வாரம் தொடர்ந்து மண் சரிவு ஏற்பட்டு ராட்சத பாறைகள் சாலையில் உருண்டு விழுந்தன.
தற்போது அடுக்கம் அருகே குருடிக்காடு பகுதியில் சாலை நடுவே 200 மீட்டர் தூரத்துக்கு நீண்ட பிளவு ஏற்பட்டுள்ளது. இதனால் இவ்வழியே செல்லும் மலை கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். சாலை நடுவே ஏற்பட்ட பிளவை ஆராய்ந்து சீரமைப்புப் பணியை மேற்கொள்ளாமல் நெடுஞ்சாலைத் துறையினர் வழக்கமான பணியைப் போல ஜல்லிக்கற்கள், தார் கலவையை கொண்டு பிளவை மூடி வருகின்றனர்.
அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த பிளவால் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.