எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் போல கட்சியினுடைய தலைமை அலுவலகத்திலேயே குண்டர்களை ஏவி, கட்சித் தொண்டர்களைத் தாக்கும் எண்ணம் எங்களுக்கு கிடையாது என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அவர்கள் வந்த போதும், அங்கிருந்து திரும்பும் போதும், அமமுக, தொண்டர்கள் கோஷம் போட்டதாக கூறப்படுகிறது. இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்தநிலையில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:
எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் மீது என்னுடைய தூண்டுதலில் தொண்டர்கள் தாக்குதல் நடத்த முயன்றதாக அதிமுகவைச் சேர்ந்த ஒருவர் காவல்துறையில் புகார் அளித்திருப்பதாக தொலைக்காட்சிகளில் செய்தி பார்த்தேன்.
பழனிசாமி & கம்பெனியினர் போல கட்சியினுடைய தலைமை அலுவலகத்திலேயே தொண்டர்கள் என்ற பெயரில் குண்டர்களை ஏவி, கட்சித் தொண்டர்களைத் தாக்கும் ஈன புத்தி எங்களுக்கு கிடையாது.
அதுவும் நாங்கள் போற்றி வணங்குகின்ற எம்ஜிஆர், ஜெயலலிதா துயில் கொள்ளும் புனித இடத்தில் இப்படியெல்லாம் நடந்து கொள்வதற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தொண்டர்கள் இவர்களைப் போல மனசாட்சி துளியும் அற்ற துரோக கும்பல் அல்ல.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஜனநாயக ரீதியாகவே அரசியலை எதிர்கொள்ளுமே தவிர, வன்முறையில் எங்களுக்கு எப்போதும் நம்பிக்கை கிடையாது. இன்றைய தினம் அம்மா அவர்களின் நினைவிடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்த தமிழக காவல்துறையினருக்கே இந்த உண்மை தெரியும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.