தமிழகம்

சென்னை விமான நிலையத்தில் தங்கம், சவுதி ரியால், மின்னணு பொருட்கள் பறிமுதல்

செய்திப்பிரிவு

ரூ 65.13 லட்சம் மதிப்புடைய தங்கம், சவுதி ரியால் மற்றும் மின்னணு பொருட்கள் சென்னை விமான நிலைய சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடத்தல் குறித்த உளவுத் தகவலின் அடிப்படையில், 2021 டிசம்பர் 3 அன்று இண்டிகோ விமானம் மூலம் துபாயில் இருந்து வந்த இரண்டு ஆண் பயணிகள் சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் வழியில் அதிகாரிகளால் இடைமறிக்கப்பட்டனர்.

அவர்களது பைகளை சோதனையிட்டபோது 24 கண்ணாடி குடுவைகளில் 601 கிராம் தங்கம் மரத்துகள்களுக்கு இடையே மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதன் மதிப்பு ரூபாய் 25,88,507 ஆகும். ரூ 17,90,907 மதிப்புடைய மின்னணு பொருட்களும் கண்டறியப்பட்டன இவை அனைத்தும் சுங்க சட்டம் 1962-ன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டன. ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மற்றொரு வழக்கில், பெங்களூரு வருவாய் உளவு இயக்குநரகம் அளித்த தகவலின் அடிப்படையில் ஃபிளை துபாய் விமானம் மூலம் 2021 டிசம்பர் 4 அன்று துபாய் செல்லவிருந்த 2 ஆண் பயணிகள் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

அவர்களது பைகளை சோதனையிட்டபோது, ரூ 21.34 லட்சம் மதிப்புடைய சவுதி ரியால்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு சுங்க சட்டம் 1962-ன் ஃபெமா விதிமுறைகள் 2015-ன் கீழ் பறிமுதல் செய்யப்பட்டன. இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய முதன்மை சுங்க ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT