மகளிர் சுய உதவிக் குழுக்கள் கடன் தள்ளுபடி, போட்டி தேர்வுகளில் தமிழ்தாள் கட்டாயம் போன்ற அரசின் முடிவுகளை வரவேற்பதாக இரா. முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ சுய வேலைவாய்ப்பு, தனிநபர் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டன. பல இடங்களில் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு சந்தை வசதி இல்லாததால் நடைமுறையில் பெரும் கடனாளியாகி நிற்கின்றன.
சட்டமன்றத் தேர்தலின் போது பெண்கள் கூட்டம், கூட்டமாக வந்து, “சுய உதவிக் குழுக்களில் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த, எங்களிடம் எந்த நிதி ஆதாரமும் இல்லை, வரும் நாட்களில் வருமானம் கிடைக்கும் வாய்ப்பும் இல்லை. எனவே கடனை தள்ளுபடி செய்து உதவுங்கள்” என்று கண்ணீர் மல்க முறையிட்டதை மறந்து விட முடியாது.
சுய உதவிக் குழுக்களின் துயர நிலையைப் பரிசீலித்த தமிழ்நாடு அரசு ரூபாய் 2674 கோடி கடன் தள்ளுபடி திட்டத்தை அறிவித்துள்ளது. இது மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ள ஆயிரக்கணக்கான பெண்களை கடன் சுமையிலிருந்து விடுதலை செய்யும் கடன் தள்ளுபடி திட்டத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்பதுடன் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு சந்தை வசதி ஏற்படுத்திக் கொடுக்க அரசு முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது.
போட்டி தேர்வுகளில் தமிழ்தாள் கட்டாயம் - அரசு முடிவுக்கு வரவேற்பு
தமிழ்நாடு அரசுத் துறைகளிலும், அரசின் பொதுத் துறைகளிலும் பணி நியமனங்கள் செய்யும் போது தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு நூறு சதவீதம் பணி நியமனம் வழங்கப்படும் என்றும், இதற்கான முறையில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் அனைத்திலும் தமிழ் மொழி பாடத்தாள் தேர்ச்சி கட்டாயம் ஆக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அரசின் இந்தக் கொள்கை அறிவிப்புக்கு செயல்வடிவம் தரும் அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது. தமிழ் மொழித் தாளில் குறைந்தபட்சம் 40 மதிப்பெண் தேர்ச்சிக்கு கட்டாயம் ஆக்கப்பட்டிருப்பதும், இந்தப் பாடத்தில் தேர்வு பெறாவதர்களின் பிற போட்டித் தேர்வுத்தாள்கள் மதிப்பீட்டிற்கே எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டிருப்பது எல்லா மட்டங்களிலும் தமிழ் மொழி வளர்ச்சியும், வளமும் பெற உதவும் என்பதுடன் தமிழ் வழி கல்வி பயில்வதற்கும் ஊக்கமளிக்கும்.
முதல் நிலை, இரண்டாம் நிலை மற்றும் இரண்டாம் நிலை ‘அ’ தேர்வுகளில் நடத்தப்படும் முதன்மை தேர்வுகளில் நூறு மதிப்பெண் கொண்ட ‘விரித்தெழுதும் தேர்வாக அமையவும், பிரிவு 3. மற்றும் 4 நிலைகளுக்கான தேர்வுகளில் பொது ஆங்கிலத் தாள் நீத்தப்பட்டு, தமிழ்மொழித் தாள் மட்டுமே மதிப்பீடு செய்யப்படும் என்றும் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதும் “எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” என்ற முழக்கத்தை செயலாக்கும் நடவடிக்கையாகும். இதனால் தமிழும், தமிழ்நாடும், இளைஞர்களும் மொழித் தளத்தில் மேலும் முன்னேற வாய்ப்புகள் திறந்து விடப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசின் முடிவை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.