தமிழக - கேரள எல்லையான தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் 5 மாவட்ட விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணையை அகற்ற வேண்டும். மாற்றாக புதிய அணை கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி கேரளாவில் பல்வேறு கட்சியினர், அமைப்புகள் சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதுபோன்ற செயல்பாடுகளைத் தடுத்து நிறுத்தக்கோரி 5 மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று தமிழக-கேரள எல்லையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
தலைவர் எஸ்.ராஜசேகர் தலைமை வகிக்க, தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் செ. நல்லசாமி, 5 மாவட்ட விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பொன்.காட்சிகண்ணன், முதன்மைச் செயலாளர் சலேத்துராஜ், ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
லோயர்கேம்ப்பில் இருந்து குமுளி நோக்கி பேரணியாக செல்ல முயன்ற விவசாயிகளை உத்தமபாளையம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயாகுப்தா தலைமையிலான போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் இருதருப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து லோயர்கேம்ப் பென்னிகுவிக் மண்டபம் அருகே விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உத்தமபாளையம் வட்டாட்சியர் அர்ஜுனன், துணை வட்டாட்சியர் சுருளி ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கேரளாவில் பெரியாறு அணைக்கு எதிராக விஷமப்பிரச்சாரம் நடைபெறுகிறது. இதுபோன்றவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யவேண்டும். பேபி அணையைப் பலப்படுத்துவதற்கு ஏதுவாக அங்குள்ள மரங்களை அகற்ற அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளைத் தெரிவித்தனர். ஆட்சியர் மூலமாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக அதிகாரிகள் கூறியதைத் தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர். விவசாயிகளின் போராட்டத்தினால் தமிழக-கேரள எல்லையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.