விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அத்திபாக்கம் கிராமம் வன்னியர் தெருவை சேர்ந்தவர் அந்தோணி குரூஸ் (42). ஈரோட்டில் பார்சல் சர்வீஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். பிளஸ் 1 வரை படித்துள்ளார். இவர் 1997-ம் ஆண்டு தனது அத்தை மகள் சகாய மேரியை திருமணம் செய்து 2 பெண் குழந்தைகள் உள்ளன. அந்தோணியின் நடவடிக்கை சரியில்லாததால் அவரை பிரிந்த சகாயமேரி குழந்தைகளுடன் தனியாக வசிக்க ஆரம்பித்தார். பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், 2003-ம் ஆண்டு பத்திரிகையில் வந்த மணமகன் தேவை விளம்பரத்தை பார்த்து சேலம் மாவட்டம் சூரமங்கலத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியை உத்திரமேரியை (37) திருமணம் செய்தார். நான் ஒரு அனாதை. பி.காம் படித்திருக்கிறேன். மாதம் ரூ.50 ஆயிரம் சம்பாதிக்கிறேன் என்று கூறி அவரை திருமணம் செய்து 7 மாதம் மட்டும் அவருடன் குடும்பம் நடத்தி விட்டு உத்திரமேரியின் ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகைகளையும் எடுத்து கொண்டு தலைமறைவானார். இதுகுறித்து சேலம் போலீஸில் உத்திரமேரி புகார் கொடுத்துள்ளார்.
பின்னர் 2013-ம் ஆண்டு கோவையை சேர்ந்த விதவை பெண் ஹேமாவை (35) திருமணம் செய்து அவருடன் 4 மாதங்கள் மட்டும் குடும்பம் நடத்தி ரூ.4 லட்சம் நகை, பணத்தை எடுத்துக் கொண்டு அந்தோணி தலைமறைவானார். ஹேமாவையும் பத்திரிகை விளம்பரத்தை பார்த்தே தொடர்பு கொண்டு ஏமாற்றியிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து மதுரவா யலை சேர்ந்த ஷோபனா (40, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரையும் பத்திரிகை விளம்பரத்தை பார்த்து தொடர்பு கொண்டு திருவேற்காடு நாகாத்தம்மன் கோயிலில் வைத்து திருமணம் முடித்துள்ளார். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிகிறார் ஷோபனா. இவரை பேசியே மயக்கியிருக்கிறார் அந்தோணி.
பார்சல் நிறுவனத்தில் மாதம் ரூ.50 ஆயிரம் லாபம் கிடைக்கிறது. வங்கி கணக்கில் ரூ.10 லட்சம் வைத்திருக்கிறேன் என்று பல பொய்களை நம்பும்படி கூறி ஏமாற்றியிருக்கிறார்.
திருமணம் முடிந்த 6-வது நாளில் 'எனது வங்கியின் கணக்கு முடங்கி விட்டது. அவசரமாக ரூ.1 லட்சம் பணம் தேவைப்படுகிறது' என்று கூறியிருக்கிறார். அவ்வளவு பணம் என்னிடம் இல்லை ஆயிரம் ரூபாய் மட்டும் தான் தற்போது உள்ளது என்று ஷோபனா கொடுத்திருக்கிறார். ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டு சென்றவர் மீண்டும் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஷோபனா மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
திருமங்கலம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரான்வின் டேனியின் ஆலோசனையின் பேரில், 'நீங்கள் கேட்ட ரூ.1 லட்சம் தயாராக இருக்கிறது. வந்து வாங்கி செல்லுங்கள்' என்று அந்தோணியிடம் ஷோபனா கூற, இதை நம்பி ஷேபனாவின் வீட்டுக்கு வந்த அந்தோணியை காவல் துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அவர் குறித்த தகவல்களை சேகரித்தபோதும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையிலும் 4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து மோசடி செய்திருப்பது தெரிந்தது. அந்தோணி மீது பெண்கள் வன்கொடுமை சட்டம் உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட் டுள்ளது. மேலும் பல பெண்களை அந்தோணி ஏமாற்றியிருக்கலாம். வெளியே தெரிந்தால் அவமானமாகி விடும் என்று பலர் புகார் கூறாமல் இருக்கலாம், அவர்களும் புகார் கொடுத்தால் அவர்களின் பெயர் விவரங்கள் வெளியே வராமல் அந்தோணி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.