சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிடும் நிர்வாகிகளுக்கான தகுதி
களை வரையறுத்து, கடும் நிபந்தனைகளை நீதிமன்றம் விதித்துள்ள நிலையில், வரும் பிப். 2-ம் தேதிதேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கறிஞர்கள் சங்கம் (எம்எச்ஏஏ) கடந்த 1889-ல் தொடங்கப்பட்ட பாரம்பரியமிக்க சங்கம்.இதில், சிங்கார வேலர், வ.உ.சி., முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன், என்.டி.வானமாமலை, எத்திராஜுலு நாயுடு, அல்லாடி கிருஷ்ணமூர்த்தி மற்றும் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் பலரும் அங்கம் வகித்துள்ளனர்.
ஆசியாவிலேயே மிகப் பெரியவழக்கறிஞர் சங்கமான இச்சங்கத்தின் தேர்தல் நடைமுறைகள் தொடர்பாக வழக்கறிஞர் கே.சத்யபால் 2019-ல் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கை கடந்த ஆகஸ்ட்மாதம் விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், ஆர்.பொங்கியப்பன் அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவு:
சங்கத் தேர்தலை நடத்த, தேர்தல்அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள மூத்த வழக்கறிஞர் ஏ.இ.செல்லையா தலைமையிலான குழுவை அங்கீகரிக்கிறோம். அதே நேரம்,உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் காலடி எடுத்து வைக்காதவர்கள்கூட சங்க உறுப்பினர்களாகி, நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு, கட்டப் பஞ்சாயத்து போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். சட்ட அறிவுபடைத்த, மிகப் பெரிய ஜாம்பவான்கள் பதவி வகித்த இச்சங்கத்தில் அதுபோன்ற சூழல் உருவாகிவிடக்கூடாது.
பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்த யார் வேண்டுமானாலும் இத்தேர்தலில் போட்டியிடலாம் என்ற நிலையும் ஏற்பட்டுவிடக் கூடாது. எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தில் 25 ஆண்டுகள் மூத்த வழக்கறிஞராகவோ அல்லது வழக்கறிஞராகவோ தொழில் புரிந்து, ஆண்டுக்கு 50 வழக்குகள் வீதம் கடந்த 5 ஆண்டுகளில் 250 வழக்குகளில் ஆஜரானவர்கள் மட்டுமே தலைவர் பதவிக்குப் போட்டியிட வேண்டும்.
துணைத் தலைவர், செயலர் பதவிகளுக்கு 20 ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணிபுரிந்து, ஆண்டுக்கு 30 வழக்குகள் வீதம், கடந்த5 ஆண்டுகளில் 150 வழக்குகளில் ஆஜரானவர்கள் மட்டுமே போட்டியிட முடியும். பொருளாளர், நூலகர் பதவிகளுக்கு 15 ஆண்டுகள் வழக்கறிஞர் அனுபவத்துடன், கடந்த 5 ஆண்டுகளில் 125 வழக்குகளில் ஆஜரானவர்கள் போட்டியிடலாம்.
தகுதியான வாக்காளர் பட்டியல்தயாரித்து, சங்க விதிகளுக்கு உட்பட்டு தேர்தலை நடத்த வேண்டும்.
இவ்வாறு கடும் நிபந்தனைகளை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில், நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவுப்படி, சங்கத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேர்தலை நடத்தும் மூத்த வழக்கறிஞர் ஏ.இ.செல்லையாவிடம் கேட்டபோது, ‘‘உயர்நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்ட நபர்களே தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும்.
வாக்களிக்கத் தகுதியான உறுப்பினர்களைக் கண்டறிய, சர்டிபிகேட்ஆஃப் பிராக்டீஸ் சான்றளிக்குமாறு தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலிடம் கோரியுள்ளோம். தகுதியான வாக்காளர் பட்டியல் டிச.17-ல் வெளியிடப்படும். ஆட்சேபங்கள், சரிபார்ப்பு பணிகள் டிச.22-க்குள்முடிக்கப்பட்டு, வாக்காளர் இறுதிப்பட்டியல் ஜன.3-ல் வெளியிடப்படும். வேட்புமனு தாக்கல் ஜன.7-ல்தொடங்கி, ஜன.11 வரை நடக்கும்.தேர்தலில் போட்டியிடும் நபர்களின்இறுதிப் பட்டியல் ஜன.28-ல் வெளியிடப்படும். பிப். 2-ம் தேதி தேர்தல் நடத்தப்படும். தலைவர் பதவிக்கு நான் போட்டியிட உள்ளதால், தேர்தல் அதிகாரி பொறுப்பில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன்’’ என்றார்.