யூ-டியூப் சேனல் நடத்திவரும் மாரிதாஸ், மதன் ரவிச்சந்திரன் ஆகியோர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் உதயநிதி ஸ்டாலின் குறித்து சில கருத்துகளை தங்களது சேனல்களில் தெரிவித்து இருந்தனர். இது உண்மைக்கு புறம்பான, அவதூறு பரப்பும் வகையில் இருப்பதாக இருவர் மீதும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு குறித்து உரிய விளக்கம் அளிக்குமாறு உதயநிதி ஸ்டாலினுக்கு சைதாப்பேட்டை 18-வது நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. அதைத் தொடர்ந்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் நேற்று காலை நேரில் ஆஜரானார். மாரிதாஸ், மதன் ரவிச்சந்திரன் ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்ததற்கான காரணத்தை உரிய ஆதாரங்களுடன் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து வழக்கை வரும் 13-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
ஏற்கெனவே, மாரிதாஸ், மதன் ரவிச்சந்திரன் ஆகியோரின் யூ-டியூப் சேனல்களுக்கு தடைவிதிக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் உதயநிதிஸ்டாலின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.