ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க கண் மருத்துவர்கள்முன்வர வேண்டும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கண் அறுவைசிகிச்சை குறித்த `ஐஐஆர்எஸ்ஐ-2021' என்ற 2 நாள் மாநாடு சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நேற்று தொடங்கியது.
அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன் மாநாட்டைத் தொடங்கிவைத்தார். ஐஐஆர்எஸ்ஐ அமைப்பின் தலைவர் வினோத் அரோரா, அமைப்பின் செயலாளரும், டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் தலைவருமான அமர் அகர்வால், ராஜன் கண் மருத்துவமனையின் தலைவர், மருத்துவ இயக்குநர் மற்றும் அமைப்பின் பொருளாளர் மோகன் ராஜன் உள்ளிட்ட பலர் மாநாட்டில் பங்கேற்றனர்.
இதில், கண்புரை மற்றும் ஒளிவிலகளுக்கான அறுவைசிகிச்சையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்த ஆய்வறிக்கைகளை கண்மருத்துவ நிபுணர்கள் சமர்ப்பிக்கின்றனர்.
இந்த மாநாட்டில் அமைச்சர் சிவ.சி.மெய்யநாதன் பேசும்போது, "கண் மருத்துவ சிகிச்சையில் தென்மாநில அளவில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. உலக அளவில் பார்வை பாதிப்பில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. கண் மருத்துவம் மேம்பல இதுபோன்ற மாநாடுகள் உதவும்.
கண் மருத்துவர்கள் பலர், ஏழைகளுக்கு பேரிடர் போன்ற காலங்களில் இலவச சிகிச்சை அளிக்கின்றனர். எனவே, அனைத்து கண் மருத்துவர்களும் ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க முன்வர வேண்டும். மேலும், பொதுமக்கள் தயக்கமின்றியும், உரிய காலத்திலும் கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்" என்றார்.
கண் மருத்துவர் அமர் அகர்வால் பேசும்போது, “இந்தியாவில் 1.2 கோடி பேர் பார்வைக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 56 சதவீதம் பேர் கண்புரையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலனோருக்கு பார்வையை சரி செய்ய முடியும். ஒருவர் கண்தானம் அளிப்பதன் மூலம், 4 பேருக்கு மறுவாழ்வு கிடைக்கும்”என்றார்.