திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் நேற்று பகலில் மழை ஓய்ந்திருந்த நிலையில், வள்ளியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் 12 மணியளவில் திடீரென்று பலத்த மழை கொட்டியது. இந்த மழை பிற்பகல் 1.30 மணிவரை நீடித்தது. மழையால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டது. குடியிருப்புகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. பண்டிதர்தெருவை வெள்ளம் சூழ்ந்ததால் மக்களை வள்ளியூர் தீயணைப்பு படையினர் மீட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர். கோட்டையடி கிராமத்தையும் வெள்ளம் சூழ்ந்தது. வள்ளியூர் அரசுப்பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. வள்ளியூர் பேருந்து நிலையத்திலும் தண்ணீர் குளம்போல தேங்கியது. ரயில்வே பாலம் முழுக்க தண்ணீர் தேங்கியதால் அவ்வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு, வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற ராதாபுரம் வட்டாட்சியர் ஜேசுராஜ் தலைமையிலான வருவாய்த் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
மழை அளவு விவரம்
திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக மணிமுத்தாறு அணைப்பகுதியில் 14.8 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. பாபநாசம்- 3 மி.மீ., சேர்வலாறு- 4 மி.மீ., கொடுமுடியாறு- 5 மி.மீ., சேரன்மகாதேவியில் 1.6 மி.மீ. மழை பெய்திருந்தது.
143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 137.15 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,574 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 2,951 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 115.50 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 697 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 50 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட வடக்கு பச்சையாறு நீர்மட்டம் 48 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 322 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 22.96 அடி உச்சநீர்மட்டம் கொண்ட நம்பியாறு நிரம்பியிருப்பதால், அணைக்கு வரும் 400 கனஅடி தண்ணீரும் அப்படியே திறந்துவிடப்பட்டுள்ளது. 52.25 அடி உச்சநீர்மட்டம் கொண்ட கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 50.50 அடியாக இருப்பதால், அணைக்கு வரும் 100 கனஅடி தண்ணீரும் அப்படியே திறந்துவிடப் பட்டுள்ளது.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அடவிநயினார் அணை, ஆய்க்குடி, சங்கரன்கோவிலில் தலா 12 மி.மீ. மழை பதிவானது. கடனாநதி அணையில் 9 மி.மீ., செங்கோட்டையில் 3 மி.மீ., தென்காசியில் 2.80 மி.மீ., கருப்பா நதி அணை, குண்டாறு அணையில் தலா 2 மி.மீ. மழை பதிவானது.
கடனாநதி அணை நீர்மட்டம் 82.70 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 82 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 68.24 அடியாகவும், குண்டாறு அணை நீர்மட்டம் 36.10 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 131.25 அடியாகவும் இருந்தது. இந்த அணைகளுக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது.
கடனாநதி அணையில் இருந்து விநாடிக்கு 254 கனஅடி, ராமநதி அணையில் இருந்து 40 கனஅடி, கருப்பாநதி அணையில் இருந்து 250 கனஅடி, குண்டாறு அணையில் இருந்து 65 கனஅடி, அடவிநயினார் அணையில் இருந்து 30 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. நேற்று மாலையில் சில இடங்களில் லேசான மழை பெய்தது.
தரைப்பாலம் மூழ்கியது
சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடத்தில் இருந்து ராஜபாளையம், கோவில்பட்டி, சிவகாசி பகுதிகளுக்கு செல்லும் சாலை உள்ளது. திருவேங்கடம் அருகே உள்ள குலசேகரன்கோட்டை பகுதியில் நிட்சேப நதியைக் கடந்து இந்த சாலை செல்கிறது. நதியின் குறுக்கே தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் நிட்சேப நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தரைப்பாலத்துக்கு மேல் ஓரடிக்கு தண்ணீர் சென்றது. வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இப்பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.