திருநெல்வேலியில் கார் டயர் வெடித்து பைக் மீது மோதியதில் அரசு மருத்துவ கல்லூரி மாணவியர் 2 பேர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவியர் திவ்ய பாலா (22), பிரிடா ஏஞ்சலின் ராணி (22), பொன். திவ்ய காயத்ரி (22) ஆகிய 3 பேரும் ரெட்டியார்பட்டி நான்கு வழிச்சாலையிலுள்ள கோயிலுக்கு ஒரு பைக்கில் சென்றனர்.
ரெட்டியார்பட்டி மலையடிவார 4 வழி சாலையில் சென்றபோது எதிரே கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்திலிருந்து ராமநாதபுரம் நோக்கி வந்த காரின் முன்பக்க டயர் திடீரென்று வெடித்தது.
கட்டுப்பாட்டை இழந்த அந்த கார், சென்டர் மீடியனில் மோதி சாலையின் மறுபக்கம் பைக்கில் சென்ற மாணவிகள் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் 3 மாணவிகளும் தூக்கிவீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். இதில் பிரிடா ஏஞ்சலின் ராணி, திவ்ய காயத்ரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
திவ்யபாலா பலத்த காயமடைந்தார். இதுபோல் காரை ஓட்டிவந்த கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் (45), காரிலிருந்த கோட்டாரை சேர்ந்த பூ வியாபாரி சண்முகசுந்தரம் (41), பேரூரை சேர்ந்த பெருமாள் (40) ஆகியோரும் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி சண்முகசுந்தரம் உயிரிழந்தார். சந்தோஷ்குமார், மாணவி திவ்யபாலா ஆகியோர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக திருநெல்வேலி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்கள். திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் சுரேஷ்குமார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.
விபத்தில் உயிரிழந்த மாணவி திவ்ய காயத்ரி தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூரை சேர்ந்தவராவார். பிரிடா ஏஞ்சலின் மதுரையைச் சேர்ந்தவர். சிகிச்சைபெறும் திவ்ய பாலா தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்தவர்.
நாகர்கோவிலை சேர்ந்த டாக்டர் ஒருவரை ராமநாதபுரத்திலிருந்து அழைத்து வருவதற்காக அவரது கார் ஓட்டுநரான சந்தோஷ்குமார் காரை ஓட்டி வந்து கொண்டிருந்தார். அவருடன் அவரது நண்பர்களான சண்முகசுந்தரம், பெருமாள் ஆகியோர் இருந்தனர். ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் நான்கு வழிச்சாலையில் வந்தபோது டயர் வெடித்து விபத்து நிகழ்ந்தது.