தமிழகம்

பொது இடங்களுக்கு வருவோரிடம் கரோனா தடுப்பூசி சான்றிதழ் கேட்க வாய்ப்பு: புதுவை ஆளுநர் தமிழிசை பேட்டி

அ.முன்னடியான்

புதுச்சேரியில் பொது இடங்களுக்கு வருவோரிடம் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் கேட்கும் அறிவிப்பு வர வாய்ப்புள்ளது எனப் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் தனியார் ஹோட்டலில் நடைபெற்ற சுற்றுலாத் தொழில் முனைவோர் கூட்டத்தைத் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று (டிச.4) தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘‘ஒமைக்ரானைப் பொறுத்தவரையில் நாம் ஜாக்கிரதையாக இருக்கிறோம். தென் ஆப்பிரிக்காவில் இருந்து வருவோரை நாம் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம்.

உடனே தலைமைச் செயலர், மருத்துவ அதிகாரிகளுடன் கூட்டம் போட்டு கரோனா தொற்று வரும்போது எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தோமோ அதேபோன்ற எச்சரிக்கையை மேற்கொண்டிருக்கிறோம். மக்களிடம் நான் கேட்டுக் கொள்வதெல்லாம் ஒமைக்ரான் பயமுறுத்துகிறான். ஆகவே, அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி நம்மைப் பாதுகாக்கும்.

சில மாநிலங்களில் தடுப்பூசி போடவில்லை என்றால், இலவசமாக மருத்துவமனையில் அனுமதி கிடைக்காது என்று சொல்லும் அளவுக்கு முதல்வர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். நாம் அந்த அளவிற்குச் சொல்ல வேண்டியதில்லை. நீங்கள் (மக்கள்) ஊசி போடாமல் மருத்துவர்களையும், அரசு மருத்துமனைகளில் உள்ள மருந்துகளையும் ஏற்றுக்கொள்வது எந்தவிதத்தில் நியாயமாக இருக்கும்.

ஆகவே மக்கள் புரிந்துகொண்டு தடுப்பூசி போட்டுக்கொள்ளாத அனைவரும் ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். பொது இடங்களுக்கு வருவோரிடம் இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் கேட்பதற்கான வாய்ப்பு உருவாக்கப்படும். இப்போது மக்களைக் கட்டாயப்படுத்த வேண்டாம் என நினைக்கின்றோம். ஆனால், அப்படி ஒரு அறிவிப்பு வர வாய்ப்புள்ளது. ஆகவே அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனச் சொல்கிறோம். மாநில எல்லைகளில் வருவோரிடம் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ் இருக்க வேண்டும்.

தொற்று அறிகுறி இருந்தால் பரிசோதனை மேற்கொள்ளப்படும். சுற்றுலாப் பயணிகளையும் கண்காணிக்கத் தலைமைச் செயலரிடம் தெரிவித்துள்ளேன்.’’

இவ்வாறு ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.

SCROLL FOR NEXT