புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்த சேகரிப்பு வாகனத்தை தொடங்கி வைக்கிறார் மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி. 
தமிழகம்

அண்ணா பிறந்தநாளையொட்டி கைதிகள் விடுதலையில் கூடுதலாக சில தளர்வுகளை முதல்வர் அறிவிப்பார்: சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தகவல்

செய்திப்பிரிவு

அண்ணா பிறந்தநாளையொட்டி கைதிகளை விடுதலை செய்யும் விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூடுதலாக சில தளர்வுகளை அறிவிக்க உள்ளதால், மேலும் அதிகமானோர் விடுதலை செய்யப்படுவர் என மாநில சட்டத்துறை அமைச்சர்எஸ்.ரகுபதி தெரிவித்தார்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.37லட்சம் மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய ரத்தம் சேகரிப்பதற்கான வாகனச் சேவை தொடக்க விழா நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கலந்து கொண்டு ரத்தம் சேகரிப்பதற்கான வாகனச் சேவையை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள 7 பேர்விடுதலை விவகாரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கூறுவதுபோல திமுக அரசு நாடகமாடவில்லை. நாடகமாடவேண்டிய அவசியமும் இல்லை.

7 பேரையும் சட்டத்துக்கு உட்பட்டு விடுதலை செய்வதற்கான நடவடிக்கையில் தமிழக முதல்வர் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக எந்த வகையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை வெளியே கூற இயலாது.

அண்ணா பிறந்தநாளையொட்டி நீண்டகாலம் சிறை தண்டனை அனுபவித்து வரும் 700 கைதிகள் விதிமுறைகளுக்குட்பட்டு விடுதலை செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில், கூடுதலாக சில தளர்வுகளை தமிழக முதல்வர் விரைவில் அறிவிக்க உள்ளார். இதனால் மேலும் அதிகமானோர் விடுதலை செய்யப்படுவர் என்றார்.

SCROLL FOR NEXT