சிவகங்கை அருகே இடுப்பளவு தண்ணீரில் நாட்டாறுகால் ஆற்றை கடந்து சென்ற கோரவலசை கிராம மக்கள். 
தமிழகம்

சிவகங்கை அருகே இடுப்பளவு தண்ணீரில் ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து செல்லும் கிராம மக்கள்

செய்திப்பிரிவு

சிவகங்கை அருகே பாலம் இல்லாததால் இடுப்பளவு தண்ணீரில் ஆபத்தான முறையில் கிராம மக்கள் ஆற்றை கடந்து செல்கின்றனர்.

நாட்டாறுகால் ஆறு சிவகங்கை அருகே ஊத்திக்குளம் கண்மாயில் தொடங்கி பெரியகண்ணனூர் வழியாக ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் கண்மாயை அடைந்து, அங்கிருந்து வங்கக் கடலில் கலக்கிறது. மாரந்தை ஊராட்சி கோரவலசை கிராம மக்கள் நாட்டாறுகால் ஆற்றை கடந்துதான் சூராணம் சாலைக்கு செல்ல முடியும்.

இதனால் அவர்கள் தங்களுக்கு பாலம் கட்டித் தர வேண்டுமென பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். நடவடிக்கை இல்லாத நிலையில் தற்போது நாட்டாறுகால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றை கடக்க முடியாததால் மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

பெரியவர்கள் மட்டும் இடுப்பளவு தண்ணீரில் ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து பொருட்களை வாங்கி வரச் செல்கின்றனர். அப்பகுதியில் வெள்ள பாதிப்பை பார்வையிட்ட செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பாலம் கட்டித்தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

சேத்தூர் அருகே நாட்டாறு கால் ஆற்றில் தரைப்பாலம் அமைக்கப்பட்டிருந்தது. ஆற்று வெள்ளத்தில் தரைப்பாலத்தின் ஒருபகுதி அடித்துச் செல்லப் பட்டது. இதனால் அப்பகுதியில் அமைந்துள்ள தளிர்தலை, மேட்டுக்குடியிருப்பு சோலைகுடி, கூத்தணி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சேத்தூர் செல்ல முடியாமல் தவிக் கின்றனர்.

மாரந்தையில் இருந்து மதுரை-சூராணம் நெடுஞ்சாலையில் மாரந்தை அருகே பாலத்தில் ஆற்றுநீர் கரைபுரண்டு ஓடுவதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்களும், மாணவர்களும் சிரமப்படுகின்றனர்.

SCROLL FOR NEXT