திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் ஏரிக்கரையை யொட்டி, ‘அறிவியல் பூங்கா’ அமைக்கப்பட்டது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலமாக மாநில நிதி குழு, ஊராட்சி ஒன்றிய பொது நிதி, கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் நல நிதி, சமூக பொறுப்பு நிதி ஆகிய திட்டங்களின் கீழ் ரூ.3 கோடி மதிப்பில் அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இயற்பியல், உயிரியியல் மற்றும் வான்வெளியியல் தொடர்பான அறிவியல் மாதிரி உபகரணங்கள் பொறுத்தப்பட்டுள்ளன. விளையாட்டு உபகரணங்கள், உடற்பயிற்சி உபகரணங்கள் மற்றும் நடை பயிற்சிக்கான பாதையும் அமைக்கப்பட்டுள்ளன.
இத்தகைய சிறப்புமிக்க அறிவியல் பூங்கா கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திறக்கப்பட்டது. அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திறந்து வைத்தார். திருவண்ணாமலை நகர மக்கள் மட்டுமின்றி, கிராமப் பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து பார்வையிட்டு மகிழ்ந்தனர்.
இந்நிலையில், கரோனா தொற்று பரவல் அதிகரித்ததால், பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு எதிரொலியாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம், அறிவியல் பூங்கா மூடப்பட்டது. அதன் பிறகு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், அறிவியல் பூங்காவை பார்வையிட மக்கள் அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையில், கரோனா 2-வது அலையின் தாக்கம் தீவிரமடைந்ததால், அறிவியல் பூங்கா மீண்டும் மூடப்பட்டது. அதன்பிறகு, ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் பொழுதுபோக்கு பூங்காக்கள் மீதான தடை உத்தரவு தொடர் வதால், அறிவியல் பூங்கா மூடப்பட்ட நிலையிலேயே, தனது பயணத்தை தொடர்கிறது.
இந்தச் சூழலில், திருவண்ணா மலை மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக பெய்து வரும் கனமழைக்கு, வேங்கிக்கால் ஏரி நிரம்பி வழிந்தது. ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறி, திருவண்ணாமலை–வேலூர் நெடுஞ்சாலையை ஒன்றரை அடி உயரத்துக்கு சூழ்ந்தது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதில், ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறி செல்லும், நீர்வழிப் பாதையை மறித்து அறிவியல் பூங்கா அமைக் கப்பட்டதால், நெடுஞ்சாலையை தண்ணீர் சூழ்வதற்கு காரணம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.
இதனால் அறிவியல் பூங்கா வுக்கு, எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சம், மக்களிடையே எழுந்துள்ளது. இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘நீர்வழிப் பாதையில் அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளதால், எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
பல மாதங்களாக மூடிக்கிடப்ப தால், அனைத்து உபகரணங்களும் செயலிழக்கும் அபாயம் உள்ளது. உபகரணங்களை பராமரித்து, அறிவியல் பூங்காவை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அல்லது, தகுதியான மாற்று இடத்தை தேர்வு செய்து, அறிவியல் பூங்காவை அமைக்க ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும். திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகே, குளத்தில் கட்டப்பட்டதாக கூறி ரூ.30 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டிருந்த நவிரம் பூங்கா அகற்றப்பட்ட நினைவுகளில் இருந்து நாங்கள் இன்னும் மீளவில்லை” என்றனர்.