தமிழகம்

தவறுதலாக ப்ளீச்சிங் பவுடரை சாப்பிட்ட சிறுமி இசக்கியம்மாள் உடல் நலன் தேறினார்: முதல்வர் ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி

செய்திப்பிரிவு

செங்கோட்டையைச் சேர்ந்த சிறுமி இசக்கியம்மாளின் தொடர் சிகிச்சைக்காக தமிழக முதல்வர் ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்தார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழக முதல்வர் ஸ்டாலினை இன்று (3.12.2021) தலைமைச் செயலகத்தில், செங்கோட்டையைச் சேர்ந்த சிறுமி இசக்கியம்மாள் பெற்றோர் எஸ்.சீதாராஜ் - பிரேமா ஆகியோர் சந்தித்து, தனது மகள் துணி வெளுப்பதற்கு உபயோகிக்கும் ராசயன திரவத்தை தவறுதலாக குடித்ததால், உணவுக்குழாய் பாதிக்கப்பட்டு மிகவும் நலிவுற்ற நிலையில் இருந்தார்.

இதனை அறிந்து, முதல்வர் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக சென்னை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பெரிய அரிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தற்போது உடல்நலம் தேறிவருவதற்கு நன்றி தெரிவித்தார்கள்.

தமிழக முதல்வர் சிறுமி இசக்கியம்மாள் தொடர் சிகிச்சைக்காக முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை சிறுமியின் பெற்றோரிடம் வழங்கி, அச்சிறுமியிடம் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

மேலும், சிறுமி இசக்கியம்மாளுக்கு அரிய அறுவை சிகிச்சையை சிறப்பான முறையில் அர்ப்பணிப்பு உணர்வோடு மேற்கொண்ட எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் எஸ்.எழிலரசி, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையின் அறுவை சிகிச்சை துறைத் தலைவர் மருத்துவர் ஆர்.வேல்முருகன், அறுவை சிகிச்சை நிபுணர் பேராசிரியர் மருத்துவர் ஆர்.செந்தில்நாதன், செவிலியர்கள் ஜி.ஆர்த்திப்ரியா, ஆர்.காயத்திரி ஆகியோருக்கு முதல்வர் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்வின்போது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை

முதன்மைச் செயலாளர் மருத்துவர் ஜெ.ராதாகிருஷ்ணன் மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் ஆர்.நாராயணபாபு, சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் மருத்துவர் தேரணிராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT