தமிழகத்தில் மதுவிலக்கு எதிராக நடந்த போராட்டங்களை அதிமுக அரசு அலட்சியப்படுத்தியதாக திமுக மகளிரணி மாநில செயலாளர் கனிமொழி குற்றம்சாட்டினார்.
சேலம், நாமக்கல் மாவட்ட திமுக மகளிரணி சார்பில் மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி சேலத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. திமுக மகளிரணி மாநில புரவலர் விஜயா தாயன்பன் தலைமை வகித்தார். இதில் பங்கேற்ற மாநிலச் செயலாளர் கனிமொழி பேசியதாவது:
உழைக்கும் மகளிர் தினம் கொண்டாடப்படும் இந்நாளில் உழைக்காதவர் முதல் வராக இருக்கிறார். அவர் அதிமுக கட்சி அலுவலகத்துக்கு கூட வருவது கிடையாது. அவ்வாறு வந்தால் அது விழாவாக கொண்டாடப்படுகிறது. தலைமைச் செயலகத்துக்கு 10 நாட்களுக்கு ஒருமுறைதான் வருவார். கருணாநிதி ஆட்சியில்தான் பெண் களுக்கு குடும்ப சொத்தில் சமபங்கு அளிக்கப்பட்டது. உள்ளாட்சி தேர்தலில் 33 சதவீத இட ஒதுக்கீடு தரப்பட்டது. அதிமுக ஆட்சியில் உள் ளாட்சி தேர்தல் நடைபெற்றபோது ஏன் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு தராமல், ஆட்சி முடியும் போது இடஒதுக்கீடு கொண்டு வர வேண்டும்.
பெண்கள் தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்பதற்காக 1989-ம் ஆண்டு மகளிர் சுய உதவிக் குழுக் களை கருணாநிதி ஏற்படுத்தினார். உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த ஸ்டாலின் 5 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்களை ஏற்படுத்தினார். சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கப்படும் என்று சொன்ன ஜெயலலிதா அதை செய்தாரா?
கடந்த 5 ஆண்டு ஆட்சியில் பெண்கள் தைரியமாக வெளியில் செல்ல முடிந்ததா? 5 ஆண்டில் பெண்கள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக 21,500 வழக்குகள் பதிவாகி உள்ளன. தமிழகத்தில் காணொலி ஆட்சி, பொருட்காட்சி ஆட்சி, ஸ்டிக்கர் ஆட்சிதான் நடக்கிறது. மதுவிலக்கு வேண்டும் என்று ஊர் மக்களோடு போராடி உயிரிழந்தார் சசிபெருமாள் அவரது போராட்டத்தை அலட்சியப்படுத்தியது இந்த அரசு.
குறைந்தபட்சம் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்றுகூட அதிமுக அரசு சொல்ல வில்லை. மதுவிலக்கை கொண்டு வந்தால் அரசின் வருமானம் குறைந்து விடும் என்று அதிமுக அமைச்சர் கூறுகிறார். திமுக ஆட்சிக்கு வந்தால் நான் மதுக்கடைகளை மூடுவேன் என்று அறிவித்தவர் கருணாநிதி. எனவே, 2 மாதத்தில் அதிமுக ஆட்சியை நாம் தூக்கி எறிய வேண்டும் என்று அவர் பேசினார்.