தமிழகம்

குற்றச்செயல்களால் இந்தியாவில் தினமும் 350 குழந்தைகள் பாதிப்பு; குழந்தைகளிடம் பயத்தை போக்கினால் மட்டுமே பாலியல் சம்பவங்கள் குறையும்: போக்ஸோ சட்டம் குறித்து விளக்கும் பெண் வழக்கறிஞர்கள்

ஆர்.பாலசரவணக்குமார்

இந்தியாவில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க வழிவகை செய்யும் போக்ஸோ சட்டம்கடந்த 2012-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் கடந்த 9 ஆண்டுகளில் குற்றசம்பவங்கள் குறைந்துள்ளதா என்றால் கேள்விக் குறியே மிஞ்சுகிறது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின்படி இந்தியாவில் தினமும் 109 குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்குள்ளாகி வருகின்றனர். 350 குழந்தைகளுக்கு எதிராக தினமும் ஏதாவது ஒரு குற்றச்செயல் அரங்கேறி வருகிறது.

கடந்தாண்டு கணக்கெடுப்பின்படி ஒரு லட்சம் குழந்தைகளில் 29 குழந்தைகள் பாலியல் சீண்டல்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர். சமீபகாலமாக தமிழகத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர்கள், நிர்வாகிகள், உடந்தையாக இருந்தவர்கள் என பலரும் தொடர்ச்சியாக கைதாகி வருகின்றனர். பாலியல் தொல்லை காரணமாக கரூர் மற்றும் கோவையி்ல் இரு மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் வேதனையின் உச்சம்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் இருந்து தற்காத்துக்கொள்ள என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எம்.பிரபாவதி கூறியதாவது:

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச் சம்பவங்கள் அதிகரிக்க முதல் காரணம் பயம். வீட்டில் கூறினால் பெற்றோர் அடிப்பார்கள், படிப்பை நிறுத்தி விடுவார்கள் என்ற பய உணர்ச்சி, எதையும் வெளிப்படையாக சொல்ல விடாமல் குழந்தைகளை மனரீதியாக பயமுறுத்தி விடுகிறது. இந்தப் பயத்தை போக்கினால் மட்டுமே பாலியல் சம்பவங்கள் குறையும். பெற்ற தாய்தான் குழந்தைகளின் முதல் ஆசான். எது நடந்தாலும்தைரியமாக வெளி்ப்படையாகச் சொல்ல வேண்டும் என்ற மனோபாவத்தை, குறிப்பாக பெண் குழந்தைகளிடம் பெற்றோர் வளர்க்க வேண்டும்.

வளரிளம் பருவம் என்பது உடலில் பரிணாம ரீதியாக ஆண், பெண் இருபாலருக்கும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய பருவம் என்பதையும், உறவினர்கள், ஆசிரியர்கள், குடும்ப உறுப்பினர்கள், வெளி நபர்களிடம் எவ்வளவு இடைவெளி விட்டுப் பழக வேண்டும் என்பதையும், பாலியல்குற்றங்களில் ஈடுபடும் கருப்பு ஆடுகளின் மிரட்டலுக்கு அடிபணிந்து விடக்கூடாது என்பதையும், எதையும் கடந்து போகலாம் என்பதையும் ஆரம்பத்தில் இருந்தே கற்றுக்கொடுக்க வேண்டும்.

அதுபோல பாதிக்கப்படும் பெண் குழந்தைகள் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை முதலில் தூக்கி எறிய வேண்டும். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க போக்ஸோ சட்டம் வழிவகை செய்துள்ளது.

குற்றவாளிகளின் தண்டனையை உறுதிசெய்ய பாதிக்கப்பட்ட நபர் அளிக்கும் ஒரே ஒரு சாட்சியம் போதும். அதைவிடுத்து தற்கொலை செய்து கொண்டால் அது குற்றவாளிகளுக்கு சாதகமாகி விடும். அந்த மாணவிக்கு நடந்த சம்பவம் நாளை மற்றொரு மாணவி்க்கும் அதே குற்றவாளியால் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

போக்ஸோ வழக்குகள் பெரும்பாலும் நீர்த்துப் போவதற்கு என்ன காரணம் என்பது குறித்து உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வி.அனுஷா கூறியதாவது:

தமிழகத்தில் மட்டும் கடந்த 2020 ஜன.31 கணக்கெடுப்பின்படி ஆயிரத்துக்கும் மேற்பட்ட போக்ஸோ வழக்குகள், விசாரணை நிலையில் உள்ளன. தவிர 888 குற்ற வழக்குகள் இன்னும் விசாரணைக்கே எடுத்துக் கொள்ளப்படவில்லை. 6 மாதத்தில் முடித்து தீர்ப்பளி்க்க வேண்டிய போக்ஸோ வழக்குகள், சிறப்பு நீதிமன்றங்களில் 4 ஆயிரத்து 600-க்கும் மேல் நிலுவையி்ல் உள்ளன.

போக்ஸோ சட்டத்தின்கீழ் பாலியல் துன்புறுத்தலுடன் கூடிய கொலைக் குற்றத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்க கடந்த 2019-ம் ஆண்டு சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி உத்தரப்பிரதேசத்தில் கடந்த ஜூலை மாதம் மைனர் பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

போக்ஸோ சட்டத்தை கடுமையாக அமல்படுத்தவும், வரும் கல்வியாண்டு முதல் சைல்டு ஹெல்ப்லைன் எண் 1098-ஐ வகுப்பறைகளிலும், பாடப்புத்தகங்களிலும் பிரசுரம் செய்யவும் தமிழக முதல்வர் உத்தரவி்ட்டுள்ளார்.

ஆனால் இது போதாது. 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் ரீதியாக யார் துன்புறுத்தினாலும் அவர்களுக்கு போக்ஸோ சட்டத்தின் கீழ் தண்டனை உறுதி, அது பெற்றோர் என்றாலும் விதிவிலக்கு கிடையாது என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 12 வயது சிறுமியின் ஆடைக்குமேல் தொடுவது பாலியல் சீண்டல் இல்லை, இதற்காக போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய முடியாது என்று சமீபத்தில் மும்பை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.

உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் கூட போக்ஸோசட்டம் பற்றிய சரியான புரிதல் இல்லை என்பதுஇதில் இருந்து தெளிவாகிறது. எனவே நீதிபதிகள்,வழக்கறிஞர்கள், போலீஸார், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் என அனைத்து தரப்புக்கும் போதிய பயிற்சி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

புதுடெல்லி முதலிடம்

இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடைபெறும் மெட்ரோ சிட்டிகளில் 5,256 வழக்குகளுடன் புதுடெல்லி முதலிடத்திலும், 2,248 வழக்குகளுடன் மும்பை இரண்டாமிடத்திலும், 1,103 வழக்குகளுடன் பெங்களூரு மூன்றாமிடத்திலும், 767 வழக்குகளுடன் நாக்பூர் நான்காமிடத்திலும், 691 வழக்குகளுடன் ஜெய்ப்பூர் ஐந்தாமிடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT