தமிழகம்

காற்றழுத்த தாழ்வு இன்று புயலாக வலுப்பெறும்; தமிழகத்தில் 3 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்

செய்திப்பிரிவு

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. அதன் காரணமாக தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவுகிறது. இது 3-ம் தேதி (இன்று) புயலாக வலுப்பெற்று மத்திய வங்கக் கடல் பகுதிக்கு நகரக் கூடும். இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கரையை 4-ம் தேதி காலை நெருங்கக் கூடும்.

3 மாவட்டங்களில்...

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக 4-ம் தேதி மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும்.

5-ம் தேதி நீலகிரி, கோவை, சேலம், தருமபுரி, ஈரோடு, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும்.

6-ம் தேதி நீலகிரி, கோவை, நாமக்கல், திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT