திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் 89-வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் 89-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை அடையாறில் உள்ள அவரது வீட்டுக்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு,எம்ஆர்கே பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் நேற்று காலை சென்று வாழ்த்து தெரிவித்தனர். அப்போது கி.வீரமணியின் மனைவி மோகனாம்மாள், திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடந்த பிறந்தநாள் விழாவில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, திராவிட இயக்கத் தமிழர் பேரவைபொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் குமரேசன் உள்ளிட்டோர் பேசினர். திராவிடர் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று வீரமணிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
முதல்வர் மற்றும் தலைவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது:
முதல்வர் ஸ்டாலின்: பெரியார் எனும் பெரும் பல்கலைக்கழகத்தில் நேரடியாக பயின்ற மாணவர். பகுத்தறிவு, சுயமரியாதை பாடங்களைதெளிவாக பயிற்றுவிக்கும் ஆசிரியர். கருணாநிதியின் கொள்கை இளவல். நெருக்கடி நிலை காலசித்ரவதைகளில் என்னை தாங்கிப்பிடித்த சக சிறைவாசி. 11 வயதில்ஏந்திய லட்சியக் கொடியை 89 வயதிலும் உறுதியாகப் பிடித்து, வருங்கால தலைமுறையிடம் பெரியாரைபரப்பும் பெருந்தொண்டர். தாய்க்கழகமாம் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நூறாண்டுகள் கடந்து நலமுடன் வாழ்க. தொண்டறம் தொடர்ந்திடுக.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: வீரமணி 80 ஆண்டுகால பொது வாழ்க்கைக்கு உரியவர். தமிழ் சமுதாயம் எழுச்சியுடன் வாழவேண்டும் என்று சிந்தித்த பெரியாரின் விரிவாக்க சிந்தனையாளரான அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: நெருக்கடிகள், சோதனைகளை எதிர்கொண்டு சமூக நீதிக்காக உறுதியாக போராடி வரும் திராவிடர் கழகத் தலைவர் வீரமணிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.