காஞ்சி ஜயேந்திரரின் 80-வது பிறந்த நாள் நிறைவு விழா சஹஸ்ர சந்திர தரிசனம் என்ற பெயரில் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாஜக தலைவர் அமித் ஷா பேசியதாவது:
காஞ்சி சங்கராச்சாரியார் ஜயேந்திரரின் 80-வது பிறந்த நாள் நிறைவு விழாவில் பங்கேற்க கிடைத்த வாய்ப்பை வாழ்க்கையில் கிடைத்த பெரும்பேறாக கருதுகிறேன். குஜராத்தில் ஜயேந்திரரின் காலடி படாத இடங்களே இல்லை. அந்த அளவுக்கு குஜராத் முழுவதும் அவர் பாதயாத்திரை மேற்கொண்டு மக்களை சந்தித்துள்ளார்.
குஜராத்தில் இரு சமூகங்களுக் கிடையே மோதல் ஏற்பட்டபோது அவர்களை அழைத்துப் பேசி சமாதானப்படுத்தி அமைதியை ஏற்படுத்தினார். அதனால்தான் நரேந்திர மோடி முதல்வரானதும் ஜயேந்திரரை குஜராத்துக்கு அழைத்து அரசு மரியாதையோடு பாராட்டு விழா நடத்தினோம்.
ஆதிசங்கரர் தோற்றுவித்த 5 சங்கர மடங்களில் காஞ்சி மடம் மிகப் பழமையானது. இந்தியாவில் இந்து மத மறுமலர்ச்சிக்கு காஞ்சி சங்கர மடமும் மிகமுக்கியமான பங்களிப்பைச் செய்துள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் மீது அரசியல் காரணங்களுக்காக வழக்கு தொடரப்பட்டது. இந்த அநீதியை எதிர்த்து அப்போது நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது நான் குஜராத் உள்துறை அமைச்சராக இருந்தபோதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டேன். உண்மை எப்போதும் தோற்காது என்பதை நிரூபிக்கும் வகையில் அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையாகியுள்ளார்.
80 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ஜயேந்திரர் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து இந்து தர்மத்துக்கும், நாட்டுக்கும் சேவையாற்ற வேண்டும்.
இவ்வாறு அமித் ஷா கூறினார்.
காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர், பாஜக தேசிய பொதுச்செயலாளர் ராம் மாதவ், மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர். விழாவில் ஜயேந்திரர் 80-வது பிறந்த நாள் நிறைவு விழா மலர் வெளியிடப்பட்டது.