தமிழகம்

உச்ச நீதிமன்ற ஆணையை மீறாத வகையில் முல்லை பெரியாறு அணையில் உபரிநீர் திறப்பு: நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தகவல்

செய்திப்பிரிவு

உச்ச நீதிமன்ற ஆணையை மீறாத வகையில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்படுகிறது என்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பின்பு அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தொடர்ந்து பெய்து வந்தகனமழை காரணமாக அய்யப்பன்தாங்கல், மவுலிவாக்கம், பரணிபுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் அதிக அளவில் தேங்கி கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும், போரூர் ஏரியும் நிரம்பிமவுலிவாக்கம் பகுதியில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அடிக்கடி சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று தாம்பரம் -மதுரவாயல் பைபாஸ் சாலை வழியாகச் சென்று போரூர் ஏரியைபார்வையிட்டார். பின்னர் மவுலிவாக்கம், தனலட்சுமி நகர் பகுதியில் குடியிருப்புகளில் தேங்கியுள்ள மழைநீரை பார்வையிட்ட பின்பு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

100 ஆண்டுகளுக்குப் பிறகு மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டுஉள்ளது. பாலாற்றில் இதுவரை இப்படி ஒரு வெள்ளம் வந்ததுஇல்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து ஏரிகளிலும் கால்வாய்கள் பெருவாரியாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. போரூர் ஏரி நடுவே ஒருவர் மாளிகை கட்டி சுற்றுச்சுவர் எழுப்பி உள்ளார். இந்த ஆக்கிரமிப்புகளை எல்லாம் ஒரு வார காலத்தில் அகற்ற வேண்டும் என நீதிபதிகள் கூறி உள்ளனர். ஒரு வார காலத்தில் முடியும் என்பது சாதாரண காரியம் அல்ல. ஆனால், நீதிமன்றத்தின் ஆணைக்கு ஏற்ப, இதை ஒரு தலையாய கடமையாக எடுத்துக்கொண்டு, வெள்ளம் வடிய, வடிய ஆக்கிரமிப்புகளை நீர்வளத் துறை நிச்சயமாக களைந்து எடுக்கும்.

அடுத்த முறை வெள்ளம் வந்தால் இந்த நிலை இருக்கக் கூடாது. அதற்காக ஆக்கப்பூர்வ பணிகளை, திமுக அரசு நிச்சயம் செய்யும். போரூர் ஏரியை தூர்வாரி சுத்தம் செய்வது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக, முதல்வரிடம் தெரிவிக்கப்படும்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம், உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி 142 அடியாக இருக்க வேண்டும். ஆனால், நீர்வரத்து அதிக அளவில் உள்ளது. அப்படியே விட்டுவிட்டால் 146 அடி வரை சென்று விடும். அப்போது உச்ச நீதிமன்ற ஆணையை மீறியதாக ஆகிவிடும். அந்த நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக கண்ணும், கருத்துமாக இருந்து திறந்து விடுகிறோம் என்றார் .

SCROLL FOR NEXT