கன்னியாகுமரி மாவட்டம் நித்திரைவிளை அருகே மக்கள வசிப்பிட பகுதியில் கழிவுநீர் கலந்து சுகாதார சீர்கேடு ஏற்படுவதை கண்டித்து வயதான தம்பதி சாலையில் படுத்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரைவிளை அருகே பாணந்தோப்பை சேர்ந்தவர் கோபாலன்(79), இவரது மனைவி நாகம்மாள்(69). இவர்களது வீடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள வசிப்பிடங்களில், பக்கத்தில் உள்ள மாடுகளுக்கான சாணம் மற்றும் கழிவுகளை சேமித்து வைக்கும் பள்ளமான கிடங்கிலிருந்து கழிவுகள் வெளியேறி உள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக பெய்த கனமழையால் மாட்டு கழிவுகள் மழைநீருடன் கலந்து குடியிருப்பு பகுதி, மற்றும் குடிநீர் கிணறு, சாலைகளில் பாய்ந்தோடி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பாணந்தோப்பை சேர்ந்த மக்கள் ஏழுதேசம் பேரூராட்சி நிர்வாகம், சுகாதாரத்துறை, மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் தற்போது தொடர்ந்து வரும் சாரல் மழையால் அங்கு வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதனால் சுகாதார சீர்கேட்டை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோபாலன், அவரது மனைவி நாகம்மாள், மற்றும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் இன்று பாணாந்தோப்பில் நித்திரைவிளை-சின்னவிளை சாலையின் குறுக்கே நாற்காலியில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அவ்வழியாக வந்த அரசு பேரூந்து, மற்றும் தனியார் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து தடைபட்டது. தகவல் அறிந்த நித்திரைவிளை போலீஸார், போக்குவரத்திற்கு இடையூறாக சாலைமறியலில் ஈடுபட்டால் கைது செய்வதாக கூறியதுடன், முதியவர் கோபாலனை இருக்கையில் இருந்து இழுத்துள்ளனர். அப்போது அவர் தடுமாறியதால் சாலை யில் படுத்து புரண்டார். இதைப்பார்த்த அவரது மனைவி நாகம்மாளும் சாலையின் குறுக்காக படுத்தார். இருவரும் சாலையில் படுத்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது. அப்போது அங்கு வந்த அப்பகுதி பிரமுகர்களும் அவர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த முயன்றனர்.
பின்னர் போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தி முதியவர் இருவரையும் சாலையோரம் அமரவைத்தனர். அப்போது அங்கு வந்த ஏழுதேசம் பேரூராட்சி செயல் அலுவலர் ஜாண்சன், தம்பதியர் கோபாலன், நாகம்மாள் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி மாட்டு கழிவு, மற்றும் பிற கழிவுநீர் வீட்டு வளாகங்களில் வராமல் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதைத்தெடார்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.