தமிழகம்

பொது இடங்களுக்கு வருபவர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளதை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்: ‘ஒமைக்ரான்’ அச்சுறுத்தலை தொடர்ந்து சுகாதாரத் துறை நடவடிக்கை

செய்திப்பிரிவு

‘ஒமைக்ரான்’ வைரஸ் அச்சுறுத்தலைத் தொடர்ந்து பொது இடங்களுக்கு வருபவர்கள், தடுப்பூசி செலுத்தியுள்ளனரா என்பதைக் கண்காணிக்க ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது:

உலக நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தலாக விளங்கி வரும் ‘ஒமைக்ரான்’ வைரஸ் பரவலைத் தடுக்க தமிழகத்தில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, தென் ஆப்பிரிக்கா, சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட 12 நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மற்றொருபுறம், மாநிலத்துக்குள்ளும் மருத்துவக் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 2-வது முறையாக கரோனா தொற்றுக்குள்ளானவர்கள், தடுப்பூசி செலுத்திய பிறகு நோய்த்தொற்றுக்குள்ளானவர்கள், குழந்தைகள், இளைஞர்கள், குடும்பம் முழுவதும்தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்கள் எனகுறிப்பிட்ட சிலரது சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. அவர்களுக்கு புதிய வகை கரோனா பாதிப்புகண்டறியப்பட்டால், அவை மேலும் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

பொது இடங்களுக்கு வருவோர் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனரா என்பதை சம்பந்தப்பட்ட இடங்களின் உரிமையாளர்கள் மூலம் உறுதி செய்ய வேண்டும் என்று ஏற்கெனவே பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியிருந்தது. அதன்படி இந்த நடவடிக்கையை கண்காணிக்க அனைத்து இடங்களிலும் சுகாதாரத் துறையைச் சேர்ந்த ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருவோருக்கும், நோய்த் தடுப்பு விதிகளை மீறுவோருக்கும் கடுமையான அபராதம் விதிக்கும் முறை மீண்டும் அமல்படுத்தப்படவுள்ளது. உருமாறி வரும் கரோனாவைரஸ் வீரியத்தையும், அச்சுறுத்தலையும் உணர்ந்து பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, தென் ஆப்பிரிக்கா, சீனா, நியூசிலாந்து, ஹாங்காங், பிரிட்டன், பிரேசில், வங்கதேசம், போட்ஸ்வானா, மொரீசியஸ், ஜிம்பாப்வே, சிங்கப்பூர், இஸ்ரேல் ஆகிய 12 நாடுகளில் இருந்தும், இந்த நாடுகளில் இருந்து இதர நாடுகள் வழியாக தமிழகம் வரும் பயணிகளுக்கு நேற்று அதிகாலை முதல்கரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று மதியம் வரை சென்னை வந்த 138 பேருக்கு கரோனா தொற்று இல்லை.

தமிழகத்தில் மொத்தம் 78.58 சதவீதத்தினர் முதல் தவணை தடுப்பூசியும், 44.24 சதவீதத்தினர் 2 தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர். தடுப்பூசி போட்டுகொண்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும், குறிப்பாக, ‘ஒமைக்ரான்’ போன்றஉருமாறிய கரோனா பாதிப்பு வந்தாலும்,உயிரிழப்பு ஏற்படுவது தடுக்கப்படும். தற்போது, கரோனாவால் உயிரிழப்போரில் பெரும்பாலானோர் தடுப்பூசி போடாதவர்களாக உள்ளனர். எனவே,அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதோடு, கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் என்று சுகாதாரத் துறைஅதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT