மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மதுரை காமராசர் பல்கலைக்கழக முன்னாள் தேர்வாணையர் ரவி வீட்டில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் நேற்று திடீர்சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.
உசிலம்பட்டி அருகில் உள்ள சங்கம்பட்டி காந்தி நகரில் வசிப்பவர் ரவி (55). இவர் உசிலம்பட்டி கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர் 2018-ம் ஆண்டு காமராசர் பல்கலைக்கழகத் தேர்வாணையராக நியமிக்கப்பட்டார். 3 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் உசிலம்பட்டி கல்லூரிக்கு மாற்றப்பட்டார். தற்போது அக்கல்லூரி முதல்வராக உள்ளார். இவரது மகன் ராஜ்குமார் பெயரில் டிராவல்ஸ் நிறுவனம் ஒன்று இயங்கிவருகிறது.
இந்நிலையில், ரவி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகப் புகார் எழுந்தது. பல்கலைக்கழகத் தேர்வாணையராக இருந்தபோதே அவர் மீது லஞ்சப் புகார்எழுந்தது. இந்நிலையில், மதுரைலஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சத்யசீலன் தலைமையில் ஆய்வாளர்கள் கண்ணன், குமரகுரு, ரமேஷ்பாபு உள்ளிட்ட காவலர்கள் நேற்று காலை 6 மணிக்கு சங்கப்பட்டியில் உள்ள ரவி வீட்டுக்குச் சென்றனர்.
அப்போது வீட்டில் ரவியும், அவரது மனைவியும் இருந்தனர். அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர் வீட்டில் உள்ள பீரோ உள்ளிட்ட இடங்களில் மாலை வரை சோதனை நடத்தினர். இதில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.