திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 6 பெண்களை மோசடியாக திருமணம் செய்தவரையும், அவருக்கு தாயாகவும், சித்தியாகவும் நடித்தவர்களையும் போலீஸார் கைது செய்தனர்.
பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. - பி காலனி உதயாநகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் ஜோசப்ராஜ். இவரது மகள் விஜிலா ராணி (33) என்பவருக்கும், தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தை சேர்ந்த டேனியல் மகன் வின்சென்ட்ராஜன்(40) என்பவருக்கும், பெருமாள்புரத்தில் கடந்த ஜூலை 15-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இதற்காக பெண் வீட்டார் வரதட்சணையாக 40பவுன் நகைகளும், ரூ.3 லட்சம்ரொக்கமும் வழங்கினர்.
இத்தம்பதியர் சாயர்புரத்தில் சில நாட்கள் குடும்பம் நடத்தினர். இந்நிலையில், தொழில் தொடங்கஉள்ளதாக தெரிவித்த வின்சென்ட், தனது மனைவி விஜிலா ராணியிடம் நகை மற்றும் பணத்தை பெற்றுக்கொண்டு சென்றார். அதன்பின்பு அவர் வீடு திரும்பவில்லை.
அதிர்ச்சியடைந்த விஜிலா ராணி, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் செந்தாமரைக் கண்ணனிடம் புகார் அளித்தார். தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சாமி தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். வின்சென்ட் ராஜனைக் கண்டுபிடித்து, பாளையங்கோட்டை மகளிர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி விசாரணை நடத்தியதில், வின்சென்ட்ராஜன் குறித்த அதிர்ச்சித் தகவல்கள் தெரியவந்தன.
அவரது உண்மையான பெயர் வின்சென்ட் பாஸ்கர் என்பதும், வெவ்வேறு பெயர்களில் இதுவரை 6 பெண்களை திருமணம் செய்ததும், அதன்மூலம் வரதட்சணையாக கிடைத்த நகை மற்றும் பணத்தை கொண்டு சொகுசாக வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது.
இதுதொடர்பாக, போலீஸார் மேலும் கூறியதாவது: விஜிலா ராணியின் தந்தை கணேசன், தனது மகளுக்கு மாப்பிள்ளை பார்க்க, பாளையங்கோட்டையிலுள்ள ஒரு திருமண தகவல் மையத்தில்பதிவு செய்துள்ளார். இதை தெரிந்துகொண்ட வின்சென்ட், திசையன்விளை சுவிசேஷபுரத்தைச் சேர்ந்த இன்பராஜ் என்ற திருமண முகவர் மூலம் விஜிலா ராணியை திருமணம் பேசி முடித்துள்ளார். இந்த திருமணத்தை நடத்தி வைத்தால் கிடைக்கும் வரதட்சணையில் பாதியைத் தருவதாக இன்பராஜிடம் தெரிவித்ததால், அவரும் பணத்துக்கு ஆசைப்பட்டு திருமணத்தை முடித்து வைத்துள்ளார்.
திருமணத்துக்காக சாத்தான்குளம் அருகேயுள்ள முதலூரை சேர்ந்த பிளாரன்ஸ்(58) என்ற பெண்ணை தனக்கு தாயாகவும், திசையன்விளை ஜேம்ஸ் தெற்கு தெருவை சேர்ந்த தாமரைச்செல்வி (56) என்பவரை சித்தியாகவும் நடிக்க வைத்துள்ளார். இதற்காக அவர்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் வின்சென்ட் கொடுத்துள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள வின்சென்ட் ராஜன் கடந்த 7 ஆண்டுகளில் சாயர்புரம், பணகுடி அருகே பாம்பன்குளம், டோனாவூர், களக்காடு அருகே கீழகாடுவெட்டி மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த 5 பெண்களை ஏமாற்றி திருமணம் முடித்துள்ளார். விஜிலா ராணியை 6-வதாக திருமணம் செய்துள்ளார். அந்தந்த பகுதி திருமண முகவர்களிடம் பண ஆசைகாட்டி இந்தமோசடியில் வின்சென்ட் தொடர்ந்துஈடுபட்டு வந்துள்ளார். இதுவரை பாதிக்கப்பட்ட பெண்களிடம் இருந்து 150 பவுனுக்குமேல் நகைகளையும், பல லட்சம் ரொக்கத்தையும் அவர் அபகரித்துள்ளார்.
வின்சென்ட் பாஸ்கர், தாயாக நடித்த பிளாரன்ஸ், சித்தியாக நடித்த தாமரைசெல்வி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருமணமுகவர் இன்பராஜை போலீஸார் தேடி வருகிறார்கள்.