தமிழகம்

ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் கோயில்களுக்கு பாரபட்சம்? - உரிய கால அவகாசம் வழங்கப்படுவதில்லை என புகார்

பெ.ஸ்ரீனிவாசன்

நீர்நிலைகளில் கட்டப்பட்டுள்ள கோயில்களை அகற்றும்போது பாரபட்சம் பார்க்கப்படுகிறது, கோயில் நிர்வாகங்களுக்கு உரிய கால அவகாசம் வழங்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கு ஒன்றில் அரசுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியது. குறிப்பாக, “மாநிலத்தில் ஏராளமான நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால், நிலத்தடி நீர் வெகுவாக குறைந்துவிட்டது. அதிகாரிகள் நீர் நிலைகளில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்க சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை. நீர் நிலைகள் மட்டுமல்லாமல் வனப் பகுதிகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. குடியிருப்புகள் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகள் தேவைதான். ஆனால், அதற்காக நீர் நிலைகளையும், வனப் பகுதிகளையும் அழித்துவிடக்கூடாது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை தமிழக தலைமைச் செயலர் உறுதி செய்ய வேண்டும். நீர் நிலைகள் பழைய நிலைக்கு கொண்டு வரப்பட்டால் தான் வருங்கால சந்ததிகளுக்கு அவை பயனுள்ளதாக இருக்கும். மேற்கொண்டு எந்த ஆக்கிரமிப்புகளும் ஏற்படாத வகையில் அரசு விழிப்புடன் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தது.

நீதிமன்ற அறிவுறுத்தலுக்கு ஏற்ப தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அகற்றப்படுகின்றன. குளங்கள், ஏரிகள், ஓடை புறம்போக்கு நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள வீடுகள், தனியார் கட்டிடங்கள், கோயில்கள் உள்ளிட்ட அனைத்தும் அகற்றப்பட்டு வருகின்றன.

கோவை மாநகரில் உக்கடம் பெரியகுளம், முத்தண்ணன் குளம், வாலாங்குளம், கிருஷ்ணாம்பதி குளம், குறிச்சி குளம் உள்ளிட்ட குளங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் குளக்கரைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன. அங்கு வசித்த பொதுமக்களுக்கு மாற்று வீடுகளும் வழங்கப்படுகின்றன.

ஆனால், கோயில்களை அகற்றுவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுகின்றன. குறிப்பாக, முத்தண்ணன் குளக்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த முத்து மாரியம்மன் கோயில், அங்காளம்மன் கோயில், கருப்பசாமி கோயில் உள்ளிட்ட 9 கோயில்கள் ஒரே நேரத்தில் இடிக்கப்பட்டது மக்களிடம் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் கோயில் நிர்வாகத்துக்கு உரிய அவகாசம் அளிக்கப்படவில்லை என புகார் கூறப்பட்டது.

இதேபோன்று மற்றொரு சம்பவம் கடந்த இரு தினங்களுக்கு முன் காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூர் அருகே நிகழ்ந்துள்ளது. பெரும்புதூர் ஏரி கலங்கல் அருகே நீர்நிலையில் இருப்பதாக கூறி பாரம்பரியம் கொண்ட கனக காளீஸ்வரர் கோயில் உரிய கால அவகாசம் அளிக்கப்படாமல் இடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. அதோடு, உள்ளாட்சி அமைப்புகள் இந்த நடவடிக்கையில் பாரபட்சம் பார்ப்பதாகவும், பாரம்பரிய சிலைகளை உரிய முறையில் அகற்ற அதிகாரிகள் அவகாசம் அளிப்பதில்லை என்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

6 மாதங்களில் 153 கோயில்கள்

இதுகுறித்து, இந்து முன்னணி மாநில செயலாளர் ஜே.கிஷோர்குமார் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறும்போது, “இவ்விவகாரத்தில் உயர் நீதிமன்ற மதுரை கிளை சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அதன்படி, நீர்நிலைகளில் இருந்து கோயில்களை அகற்றும்போது உரிய முறையில் நோட்டீஸ் அளிக்க வேண்டும். கோயில்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். திடீரென அகற்றக் கூடாது என்று கூறியுள்ளது. இதேபோல, 1993-ல் மத்திய அரசு கொண்டு வந்த சட்டம் ஒன்றில் 1947-க்கு முந்தைய கோயில்கள் எங்கிருந்தாலும் அகற்றக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்து கோயில்களை அகற்றுவதில் எந்த வழிகாட்டு நெறிமுறைகளும் பின்பற்றப்படுவதில்லை. மாறாக பாரபட்சம் பார்க்கப்படுகிறது. முத்தண்ணன் குளக்கரையிலிருந்து அகற்றப்பட்ட கோயில்களுக்கு மாற்று இடம் வழங்குவதாக தெரிவித்தனர். ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை.

தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் இவ்வாறு 153 கோயில்கள் அகற்றப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்பு என்றால் பாரபட்சம் இல்லாமல் அனைத்தையும் அகற்ற வேண்டும்” என்றார்.

இதுகுறித்து, கோவை மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அதிகாரிகளிடம் கேட்டபோது, “கோயில் உட்பட எந்த ஆக்கிரமிப்பாக இருந்தாலும் 7 நாட்களுக்கு முன்னதாக நோட்டீஸ் அளிக்கப்பட்ட பிறகுதான் அகற்றப்படுகின்றன. பாரபட்சம் எதுவும் பார்க்கப்படுவதில்லை. ஆவணங்கள் உரிய முறையில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பிறகே நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன” என்றனர்.

SCROLL FOR NEXT