தமிழகம்

தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றியது குறித்து அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் தலைமைச் செயலர் ஆஜராக நேரிடும்: உயர் நீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை அருகே உள்ள நீர் நிலைகளை பாதுகாக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் மீதான விசாரணை நேற்று பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பி.டி. ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன.

அப்போது நீதிபதிகள், ``தண்ணீர் மிகவும் அத்தியாவசியமானது. தற்போது தொடர் மழை காரணமாக சென்னையின் பல பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன. அதேசமயம் ஒவ்வொரு ஆண்டும் 4 மாதங்கள் சென்னையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்படுகிறது.

இந்த அனைத்து வழக்கிலும் தொடர்புடைய ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் உடனடியாக அகற்ற வேண்டும். நீதிமன்றம் தொடர்ச்சியாக கண்காணிக்கும்'' என்றனர். அப்போது அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் ஆஜராகி பதில்மனு தாக்கல் செய்தார்.

தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்‌சேனா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அந்த அறிக்கையில், ``உள்ளாட்சி அமைப்புகளில் சுமார் 9,802 நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அடையாளம் காணப்பட்டு, அதில் 5,178 ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 210 நீர் நிலைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது'' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதையடுத்து நீதிபதிகள், மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற 2 ஆண்டுகளுக்கு முன்பே இந்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் தமிழக அரசி்ன் தலைமைச் செயலாளர் ஆஜராக உத்தரவிட நேரிடும், என எச்சரித்து விசாரணையை டிச.8-க்கு தள்ளி வைத்துள்ளனர்.

SCROLL FOR NEXT