ஆவடி அருகே பட்டாபிராம் - கோபாலபுரம் கிழக்கு பகுதியில் கழிவுநீர் கலந்த மழைநீர் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக நூற்றுக்கும் மேற்பட்ட வீடு களை சூழ்ந்துள்ளது. இதனால், மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மிதவையில் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். 
தமிழகம்

ஆவடி அருகே வீடுகளை சூழ்ந்துள்ள கழிவுநீர் கலந்த மழைநீர்: அத்தியாவசிய தேவைகளுக்காக மிதவையில் பயணிக்கும் மக்கள்

செய்திப்பிரிவு

ஆவடி மாநகராட்சியில் உள்ளதமிழ்நாடு வீட்டுவசதி வாரியகுடியிருப்பு, ராம் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேங்கிய வெள்ளம் வடிந்துள்ளது. ஆனால், பட்டாபிராம் - கோபாலபுரம் கிழக்கு பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளை கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக கழிவுநீர் கலந்த மழைநீர் சூழ்ந்துள்ளது.

சேக்காடு ஏரியை ஒட்டியுள்ள இப்பகுதியில், மழைநீர் வெளியேற முறையான ஏற்பாடுகள் இல்லாததால் சுமார் 3 அடி உயரத்துக்கு நீர் தேங்கியுள்ளது. இதில்பாம்புகள் வருவதால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

வீடுகளிலேயே முடங்கியுள்ள பொதுமக்கள், பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக தெர்மாகோல் அட்டைகளை கொண்டு மிதவைகளை உருவாக்கி, அதில் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆண்டுதோறும் மழைக்காலங்களிலும் இந்நிலை நீடிப்பதாக கூறும் கோபாலபுரம் கிழக்குபகுதி மக்கள், வீடுகளை சூழ்ந்துள்ள கழிவுநீர் கலந்த மழைநீரை வெளியேற அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT