ரெட்டிச்சாவடி அருகே தனியார் பேருந்து ஓட்டுநரை கத்தியால் வெட்டி பணம் பறித்த 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கடலூரில் இருந்து நேற்று முன்தினம் மாலை புதுச்சேரிக்கு தனியார் பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது. பேருந்து ரெட்டிச்சாவடி அருகே உள்ள பெரியகாட்டுப்பாளையம் அருகில் வந்த போது பதிவெண் இல்லாத இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் பேருந்தை வழிமறித்து நிறுத்தியுள்ளனர்.
பின்னர் அவர்கள் ஓட்டுநர் தேசிங்குவை திட்டி கத்தியால் அவரது முழங்கையில் வெட்டினர். பேருந்தின் முன்பக்க கண்ணாடியையும், ஓட்டுநர் இருக்கையின் கதவில் உள்ள கண்ணாடியையும் அடித்து உடைத்து சேதபடுத்தியுள்ளனர். இதை தடுக்க வந்த பேருந்து நடத்துநர் நவீன்குமாரை கத்தியை வைத்து மிரட்டி ரூ.1,200-ஐ பறித்துச் சென்றனர். இதுகுறித்து பேருந்து ஓட்டுநர் தேசிங்கு ரெட்டிச்சாவடி போலீஸில் புகார் செய்தார். இதனை தொடர்ந்து கடலூர் டிஎஸ்பி கரிகால் பாரி சங்கர் மேற்பார்வையில் ரெட்டிச்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் தலைமை போலீஸார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் நேற்று பேருந்து ஓட்டுநரிடம் பணம் பறித்த கடலூர் வட்டம் பெரிய காட்டுப்பாளையம் சிவனார்புரம் ரோட்டை சேர்ந்த பிரித்தி என்ற பிரித்விராஜன்(22), பெரியகாட்டுப்பாளையம் அய்யனார்கோயில் தெருவை சேர்ந்த சீனுவாசன் (21), புதுச்சேரி பாகூர் காமராஜ் நகரைச் சேர்ந்த மருது என்ற மருதுநாயகம் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கொடுவாகத்தி, இரண்டு இரு சக்கர வாகனங்களுடன், கொள்ளையடித்த ரூ.1, 200ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.