தமிழகம்

கலாம் பெயரில் கட்சி தொடங்கியது தவறில்லை: கோவையில் பொன்ராஜ் விளக்கம்

செய்திப்பிரிவு

அப்துல் கலாம் ஒரு பொது முகம். அவரது கனவுகளை நிறைவேற்றவே அவரது பெயரில் கட்சி தொடங்கியிருக்கிறோம். அதில் தவறு ஏதும் இல்லை என அப்துல் கலாம் லட்சிய இந்தியா கட்சித் தலைவர் வி.பொன்ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

கோவையில் நேற்று செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது: மார்ச் 15-ல் இருந்து 23-ம் தேதி வரை அனைத்து மாவட்டங் களிலும் சுற்றுப்பயணம் செல்கி றோம். இதேபோல உறுப்பினர் சேர்க்கையும் நடக்கிறது. ஏப்.2-ல் இருந்து ஏப்.10 வரை அரசியல் மாற்றத்துக்கான சாசனப் பயிற்சி நடத்துகிறோம். தொகுதிக்கு தலா 10 பேரை தேர்வு செய்து, பயிற்சிகள் கொடுத்து, தேர்தலில் நிறுத்த உள்ளோம். ஒரு எம்எல்ஏ எப்படி உருவாகிறார் என்பதை மக்கள் பார்க்க முடியும். தொகுதி வாரியாக தனித்தனியாகவும், மாநிலத்துக்கு தனித் தேர்தல் அறிக்கையும் தயார் செய்யப் படும். பின்னர் மாநாடு மூலம் வேட்பாளரையும், தேர்தல் அறிக் கையையும் வெளியிடுவோம்.

அப்துல் கலாம் ஒரு பொது முகம். காந்தி, பெரியார், அம்பேத்கர், எம்ஜிஆர் பெயரில் கட்சிகள் இருப்பதுபோல, கலாமின் கனவுகளை நிறைவேற்ற, அவர் பெயரில் கட்சி ஆரம்பித்தோம். கலாமின் சகோதரர் வேறொரு கட்சியில் இருப்பதால் எங்களை எதிர்க்கிறார்; அது அவரது பேரனுக்கான அரசியல்.

கலாம் ஒன்றும் அரசியலுக்கு அப்பாற்பட்டவர் அல்ல. ஒவ்வொரு இளைஞரும் அரசியலுக்கு வரவேண்டுமென்று புத்தகமும் எழுதி, வளர்ச்சிக்கான அரசியல் தேவை என்றவர் அவர். சிரஞ்சீவி, விஜயகாந்த், சரத்குமாருக்கு அறிவுரை கூறி வழிகாட்டியவர். அவர் பெயரில் கட்சி ஆரம்பித்தது 100 சதவீதம் சரியானது.

அப்துல் கலாமோடு பணியாற் றிய அனுபவத்தின் அடிப்படையில் அதிமுக அரசு அமைந்தவுடன் அரசு செயலர்களுக்கு, வளமான தமிழகம் உருவாக்க 54 தலைப்புகளில் 5 நாள் பயிற்சி கொடுத்தோம். அந்த பயிற்சியோடு சரி. எதுவுமே நிறைவேறவில்லை.

கெயில் திட்டம் வேண்டாம் என கூறவில்லை. அதை செயல்படுத்தும் விதத்தில் உள்ள ஆணவத்தால் மக்களின் நலன் புதைக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT