தமிழகம்

விளாத்திகுளத்தில் சுப்பிரமணியசுவாமி கலை, அறிவியல் கல்லூரி திறப்பு

எஸ்.கோமதி விநாயகம்

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் விளாத்திகுளத்தில் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறப்பு விழா நடந்தது.

விளாத்திகுளம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து விளாத்திகுளம் கல்லூரி வளாகத்தில் நடந்த விழாவில் சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மீன் வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜீ.வி.மார்க்கண்டேயன், எம்.சி.சண்முகையா, மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.

தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்டத்தில் 18 அமைப்புச்சாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் பதிவு செய்துள்ள 3,457 தொழிலாளர்களுக்கு ரூ.57,81,700 தொகைக்கான திருமணம், கல்வி, இயற்கை மரணம், விபத்து மரணம் மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிக்கான ஆணையை அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினர்.

நிரந்தர கட்டிடம் கட்ட நடவடிக்கை

பின்னர் அமைச்சர் கீதாஜீவன் பேசும்போது, ”விளாத்திகுளம் விவசாயத்தை நம்பி உள்ள பகுதியாகும். இந்த பகுதியில் இருக்கிற மாணவர்கள் எளிதில் கல்லூரிக்கு செல்லும் வகையில் அமைய வேண்டும் என தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் என அனைவரும் சேர்ந்து வைத்த கோரிக்கையை ஏற்று விளாத்திகுளத்தில் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியை இன்று தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்துள்ளார். அறநிலையத்துறை மூலம் இக்கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம் கட்டி தருவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் உடனடியாக செய்து தருபவராக தமிழ்நாடு முதலமைச்சர் விளங்குகிறார்” என்றார் அவர்.

மாணவர்களின் கனவு நிறைவேறியுள்ளது

நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், ”தமிழ்நாடு முதலமைச்சர் ஒவ்வொரு பகுதிகளுக்கு என்னென்ன தேவை என்பதை கேட்டறிந்து தேவைகளை பூர்த்தி செய்கிறார். அதனடிப்படையில் விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று இந்த பகுதியில் கல்லூரி அமைவதற்கு வழிவகை செய்துள்ளார். இந்த பகுதி மாணவர்கள் கல்லூரி வர வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றி இப்பகுதியில் வசிக்கும் 12-ம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகளின் கனவை நிறைவேற்றியுள்ளார்” இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் இணை ஆணையர் குமரதுரை, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் தூத்துக்குடி ரோஜாலி சுமுதா, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் செல்வகுமார், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர்கள் முருகபிரசன்னா (சமூக பாதுகாப்புதிட்டம்), திருவள்ளுவன் (அமலாக்கம்), தி.மு.க. மாணவரணி மாநில துணை செயலாளர் உமரிசங்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT