திருப்பூரில் லேசான மழைக்கு குளம் போல் சாலைகள் மாறியதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் 90 சதவீதத்துக்கும் மேலான நீர் பிடிப்புப் பகுதிகளான அணைகள், தடுப்பணைகள், குளங்கள், குட்டைகள் மற்றும் ஆற்றுப்பகுதி என அனைத்திலும் நீர் நிரம்பியுள்ளன.
இந்த நிலையில் நேற்று பகல் பொழுதில் திருப்பூர் மாநகரில் திடீரென மழை பெய்தது. இதனால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து தேங்கியது.
தென்னம்பாளையம் காலனியில் மழைநீர் தேங்கியதால், அங்கிருந்த பொதுமக்கள் அவதிப்பட்டனர். பல்லடம் சாலையில் தமிழ்நாடு திரையரங்கம் பகுதியிலும் மழைநீர் செல்வதற்கு வழியின்றி சாலையில் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
அதேபோல் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மழைநீர் தேங்கியது. இதனால் ஆட்சியர் அலுவலகத்துக்கு பல்வேறு தேவைகளுக்கு வந்த பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் என பல்வேறு தரப்பினரும் அவதியடைந்தனர். ஆட்சியர் அலுவலகத்தில் எதிரில் செயல்பட்டு வரும் தற்காலிக பேருந்து நிலையமும் தண்ணீரில் தத்தளித்தது.
திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தின் பிரதான கட்டிடத்துக்கு செல்லும் பகுதியில் நேற்று தேங்கிய மழைநீர்
இது தொடர்பாக அங்கிருந்த பயணிகள் சிலர் கூறியதாவது: உடுமலை, பொள்ளாச்சி மற்றும் கோவை ஆகிய மூன்று ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள், பல்லடம் சாலையில் ஆட்சியர் அலுவலகம் எதிரில் இருந்து தான் செல்கின்றன. நாள்தோறும் பல ஆயிரம் பேர் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்துகின்றனர். ஆனால் இங்கு இயற்கை உபாதைக்கு கூட வழியில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் மழைபெய்யும்போது, தண்ணீர் தேங்குகிறது.
கழிவுநீர் மற்றும் மழைநீர் இரண்டும் ஒன்றோடன்று கலப்பதால் பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். அதேபோல் பேருந்து நிலையத்தை பயன்படுத்தும் பலர் தொடர்ந்து கண்ட இடங்களில் எச்சில் துப்புவதால், அவையும் சுகாதாரக்கேட்டுக்கு வழிவகுக்கிறது. இயற்கை உபாதைக்கு தற்காலிக கழிவறைகள் மற்றும் குடிநீர் உள்ளிட்ட எவ்வித வசதிகளும் இல்லாததால், பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
இதேபோல் மாநகரில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்களில் போதிய அடிப்படை வசதிகளை செய்து தருவதுடன், மழைநீர் தேங்கி நிற்காதபடி மாநகராட்சியும், போக்குவரத்துத்துறை அதிகாரிகளும் செய்ய வேண்டும் என்றனர்.
திருப்பூர் போக்குவரத்து துறை அலுவலர்கள் கூறியதாவது: தற்காலிக பேருந்து நிலையங்களில் போதிய அடிப்படை வசதி செய்து தர வலியுறுத்தி, மாநகராட்சியிடம் கடிதம் கொடுத்தோம். தற்போது பழைய பேருந்து நிலைய பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன. ஆகவே இந்த தற்காலிக பேருந்து நிலையங்கள் எவ்வளவு நாட்கள் இருக்கும் என்று தெரியாது. மழை பெய்தால் தண்ணீர் தேங்குவது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரியப்படுத்துகிறோம் என்றனர்.