தென் ஆப்பிரிக்கா, சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட12 நாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் கட்டாயம் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்கா நாட்டில் கண்டறியப்பட்ட ‘ஒமைக்ரான்’ கரோனா வைரஸ் தடுப்புநடவடிக்கை குறித்து அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய 4 சர்வதேச விமான நிலையங்களின் இயக்குநர்களுக்கு தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கரோனா அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அவர்களைத் தனிமைப்படுத்தி, சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு தகவல்தெரிவிக்க வேண்டும். தற்போது தென் ஆப்பிரிக்கா, சீனா, நியூசிலாந்து, ஹாங்காங்,பிரிட்டன் போன்ற ஐரோப்பிய நாடுகள், பிரேசில், வங்கதேசம், போட்ஸ்வானா, மொரீசியஸ், ஜிம்பாப்வே, சிங்கப்பூர், இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
இந்த நாடுகளில் இருந்தும், அங்கிருந்து இதர நாடுகள் வழியாக வரும் அனைத்து பயணிகளுக்கும் கரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். அதற்கான செலவை பயணிகளிடம் வசூலித்துகொள்ளலாம். பரிசோதனை முடிவு வரும்வரை, அவர்களை விமான நிலையத்திலேயேதங்கவைக்க வேண்டும். அவர்களுக்கு கரோனா தொற்று இல்லை என்றாலும், 7 நாட்கள் வீட்டு தனிமைக்கு உட்படுத்த வேண்டும். 8-வது நாளில் மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டும். அதில் தொற்று பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டால், அடுத்த 7 நாட்களுக்கு பயணிகள் தாங்களாகவே உடல்நிலையைக் கவனித்துக் கொள்ள வேண்டும்.
பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டால், அவர்களின் மாதிரிகளை, மரபணு பகுப்பாய்வு மையத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும். தொற்று உறுதி செய்யப்பட்ட பயணியை,தனி அறையில் தனிமைப்படுத்தி சிகிச்சைஅளிக்க வேண்டும். ‘ஒமைக்ரான்’ பாதிப்பு கண்டறியப்படாத மற்ற நாடுகளில்இருந்து வரும் பயணிகளுக்கும் வெப்பபரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அவர்களுக்கு தொற்று அறிகுறி இருந்தால், கரோனா பரிசோதனை செய்வது அவசியம். ஒவ்வொரு விமானத்திலும் 5 சதவீத பயணிகளுக்கு கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும். அதற்கான செலவை, அந்தந்த விமான சேவை நிறுவனங்களே ஏற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத் துறையுடன் ஆலோசனை
இதற்கிடையே, மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷன் தலைமையில், அனைத்து மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. காணொலி மூலம் நடந்த இக் கூட்டத்தில், தமிழக சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், தேசிய நல்வாழ்வு குழும இயக்குநர் தாரேஷ் அகமது, சுகாதார திட்ட இயக்குநர் உமா, மருத்துவ பணிகள் கழக திட்ட இயக்குநர் தீபக் ஜேக்கப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.