தமிழகம்

வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி; ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளன: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

செய்திப்பிரிவு

ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடி பண மோசடி செய்ததாக விஜய் நல்லதம்பி, ரவீந்திரன் ஆகியோர் அளித்த புகாரின்பேரில், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துபாண்டியன் ஆகியோர் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் அளிக்கக் கோரி ராஜேந்திரபாலாஜி உள்ளிட்ட 4 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.‘எங்கள் மீது புகாரை கொடுத்துள்ள நபர்கள், ஏற்கெனவே அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக பல புகார்கள் உள்ளன. பணம் பறிக்கும் நோக்கில் எங்கள் மீதுபொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’ என மனுவில் தெரிவித்து இருந்தனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை, நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு நேற்று நடந்தது. அப்போது ராஜேந்திர பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் ஆஜராகி, ‘‘இந்த வழக்கில் புகார் கொடுத்துள்ள விஜய் நல்லதம்பிதான் குற்றவாளி. அவரை காவல்துறை பாதுகாக்கிறது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு இதில் சிறிதும் தொடர்பில்லை. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயார். எனவே, முன்ஜாமீன் வழங்க வேண்டும்’’ என்றார்.

போலீஸ் தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு வழக்கறிஞர் திலக், ‘‘முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான மோசடி புகாரில் இதுவரை 23 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ராஜேந்திர பாலாஜிக்கு அவரது உதவியாளர் பலராமன் மூலமாக இந்த பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது. இந்த வழக்கில் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக அனைத்து ஆதாரங்களும் உள்ளன. எனவே, முன்ஜாமீன் அளிக்கக் கூடாது’’ என ஆட்சேபம் தெரிவித்தார்.

அதையடுத்து முன்ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளார்.

SCROLL FOR NEXT