இளங்கோவன் 
தமிழகம்

கூட்டுறவு வங்கித் தலைவர் நண்பர்களின் 6 வங்கி லாக்கரை திறந்து சேலத்தில் போலீஸார் சோதனை: சொத்து ஆவண விவரங்கள் சேகரிப்பு

செய்திப்பிரிவு

தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கித் தலைவர் இளங்கோவனின் நண்பர்களுக்கு சொந்தமான 6 வங்கி லாக்கரை சேலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் திறந்து அதில் இருந்த சொத்து ஆவண விவரங்களை சேகரித்துள்ளனர்.

சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராகவும், தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கித் தலைவர் மற்றும் சேலம் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவராக இருந்து வருபவர் இளங்கோவன். இவர் முன்னாள் முதல்வர் பழனிசாமியின் நெருங்கிய நண்பர்.

இந்நிலையில், அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இளங்கோவன் மீது எழுந்த புகார் தொடர்பாக அக்.22-ல் அவரது வீடு உள்ளிட்ட 36 இடங்களில் சேலம் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் சோதனை நடத்தினர். இதில், 41 கிலோ தங்க நகைகள், 280 கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூ.34.28 லட்சம் பணம்,முக்கிய ஆவணங்கள் மற்றும் சிலவங்கிகளின் லாக்கர் சாவிகளை கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட வங்கி லாக்கர் சாவி உள்ளிட்டவற்றை சேலம் ஊழல் தடுப்பு கண்காணிப்பு நீதிமன்றத்தில் போலீஸார் ஒப்படைத்தனர்.

இந்நிலையில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி ராஜேஷ் தலைமையிலான போலீஸார், நீதிமன்றத்தில் லாக்கர் சாவியை பெற்று, நேற்று முன்தினம் (29-ம் தேதி) விசாரணை நடத்தினர். இதில், வங்கி லாக்கர்கள் இளங்கோவனின் நண்பர்கள் 4 பேருக்கு சொந்தமானது எனவும் அவை அயோத்தியாப்பட்டணம் இந்தியன் வங்கி, முள்ளுவாடி கேட் அருகே உள்ள சேலம் மத்திய கூட்டுறவு வங்கி, சேலம் அழகாபுரத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி, ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம், அம்மாப்பேட்டை கூட்டுறவு வங்கிகளின் லாக்கர் சாவி என்பதும் தெரிந்தது.

லாக்கரில் சொத்து ஆவணங்கள்

இதையடுத்து, வங்கி லாக்கரை திறந்து பார்வையிட்டனர். இதில், சொத்து ஆவணங்கள் இருப்பது கண்டறியப்பட்டு, சொத்து தொடர்பான விவரங்களை போலீஸார் பதிவு செய்தனர். பின்னர் அந்த ஆவணங்களை வங்கி லாக்கரில் வைத்து பூட்டி, சாவியை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து, ஆவணங்களில் இருந்த சொத்து தொடர்பாகவும் இளங்கோவன் வெளிநாடுகளில் ஏதாவது முதலீடு செய்துள்ளாரா என்பது தொடர்பாகவும் அடுத்தக்கட்ட விசாரணையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT