கோயம்பேடு சந்தையில் தக்காளி லாரிகள் நிறுத்த உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இடம் ஒதுக்கப்பட்டு விட்டதாக சிஎம்டிஏஅதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்டில் கரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட தக்காளி மைதானத்தை திறக்கக் கோரி தந்தை பெரியார் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், ‘‘தொடர் மழை மற்றும் வெளி மாநில தக்காளி லாரிகளை நிறுத்த போதுமான இடவசதியின்மை போன்ற காரணங்களால் தக்காளி வரத்து குறைந்து, விலையும் கடுமையாக உயர்ந்து வருவதாகவும், மூடியுள்ள மைதானத்தை திறந்து தக்காளி லாரிகளை நிறுத்திபொருட்களை இறக்கி, ஏற்ற அனுமதி அளித்தால் விலை வெகுவாக குறையும் என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, தற்காலிக ஏற்பாடாக நவ.30-ம் தேதி அதிகாலை 4 மணிமுதல் 4 வாரங்களுக்கு கோயம்பேடு மார்க்கெட்டில் வெளி மாநில தக்காளி லாரிகளை நிறுத்தி லோடுகளை இறக்கி, ஏற்ற ஓர் ஏக்கர் இடத்தை சிஎம்டிஏ மற்றும் கோயம்பேடு மார்க்கெட் கமிட்டி அதிகாரிகள் ஒதுக்கிக் கொடுக்க வேண்டும்’’என நேற்று முன்தினம் உத்தரவிட்டு இருந்தார்.
ஆனால், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தகுந்த இடத்தை அதிகாரிகள் ஒதுக்கித் தரவில்லை எனக்கூறி நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கே.சிவக்குமார் நேற்றுமுறையீடு செய்தார். பொதுமக்களின் நலன் கருதி பிறப்பித்த உத்தரவை அமல்படுத்துவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக நீதிபதி கடும் அதிருப்தி தெரிவித்து சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களை நேரில் ஆஜராக உத்தரவிட்டு இருந்தார்.
இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கோயம்பேடு மார்க்கெட்டில் 14-ம் எண் நுழைவு வாயில் பகுதியில் ஓர் ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு ஒதுக்கப்பட்டு விட்டதாக சிஎம்டிஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதி இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.
இதனிடையே, உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் விதமாக கோயம்பேடு மார்க்கெட் கமிட்டி சார்பில், 14-ம் எண் நுழைவுவாயில் அருகில் ஓர் ஏக்கர் இடம்தேர்வு செய்யப்பட்டு, அந்த இடத்தை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் சீரமைக்கும் பணி நேற்றுநடந்தது. இப்பணிகளை கோயம்பேடு மார்க்கெட் கமிட்டி தலைமைநிர்வாக அதிகாரி எஸ்.சாந்தி நேரில் ஆய்வு செய்தார்.
அங்கு வாகனங்களை நிறுத்தி தக்காளி கூடைகளை இறக்கி, ஏற்ற வசதியாக உயர் கோபுர மின்விளக்கு மற்றும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணிகளும் நடந்து வருகின்றன. இப்பணிகள் நேற்றிரவு முடிந்த நிலையில், இன்று அதிகாலை முதல் அங்கு தக்காளி வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன.