விளாத்திகுளம் பகுதியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக சுமார் ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்ட மக்காச்சோளம், மிளகாய் பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
விளாத்திகுளம், புதூர், நாகலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ராபி பருவத்தை முன்னிட்டு உளுந்து, பாசி, மக்காச்சோளம், வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி, கம்பு உள்ளிட்ட பல்வேறு பயிர்களை பயிரிட்டுள்ளனர். இப்பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதனால் இப்பகுதிகளில் உள்ள கண்மாய்கள், ஊருணிகள் நிரம்பி வருகின்றன. மேலும், அளவுக்கு அதிகமாக மழை பெய்து வருவதால் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி நிற்கின்றன. இதனால் பயிரிடப்பட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
விளாத்திகுளம் அருகேயுள்ள கே.சுப்புலாபுரம், காடல்குடி, மல்லீஸ்வரபுரம், லட்சுமிபுரம், மிட்டா வடமலாபுரம், அயன் வடமலாபுரம், சின்னூர், பூசனூர், சூரங்குடி, சிவஞானபுரம், அரியநாயகிபுரம் உள்ளிட்ட பகுதியில் சுமார் ஆயிரம் ஹெக்டேருக்கு மேற்பட்ட பரப்பளவில் பயிரிடப்பட்டு இருந்த வெங்காயம், மிளாகாய், மக்காச்சோளம், உளுந்து, பாசி உள்ளிட்ட பயிர்கள் முற்றிலும் தண்ணீரில் மூழ்கி அழுகி விட்டன. இதில், வெங்காயம், மிளகாய் முற்றிலும் சேதமடைந்துவிட்டன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மழை தொடர்ந்து பெய்து வருவதால் இந்தாண்டு மகசூல் என்பது இல்லாமல் போய்விடும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ''இந்தாண்டு மழையை நம்பி புரட்டாசி முதல் வாரமே விதைப்பு பணியில் ஈடுபட்டோம். ஆனால், மழை கைவிட்டதால் சில இடங்களில் விதைகள் முளைக்கவே இல்லை. பல இடங்களில் சுமார் முக்கால் அடி வளர்ந்த நிலையில் பயிர்கள் கருகின. இதே நிலை தான் அடுத்த முறையும் தொடர்ந்து. இதனால் 3-வது முறையாக விதைத்து பயிர்கள் வளர்ந்த நிலையில், தற்போது மழையில் முற்றிலும் அழுகி விட்டன.
மழை முற்றிலுமாக நின்று, நிலங்களில் ஈரப்பதம் குறைந்து, மீண்டும் தயார்படுத்த 4 மாதங்கள் ஆகும். எனவே, மழையால் பாதிக்கப்பட்ட மானாவாரி நிலங்களுக்கு தமிழக அரசு நிவாரண வழங்க வேண்டும்'' என்றனர்.