தமிழக சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம், அனைத்து சுகாதார அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸின் முதல்கட்ட சாத்தியக் கூறுகளை கண்டறியும் பரிசோதனையை, சென்னை, கோவை,திருச்சி, சேலம், மதுரை, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ஆய்வகங்களில் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மொத்தம் 12 ஆய்வகங்களில், தெர்மோ டெக்பாத் என்ற நவீனகருவி மூலம் இதைப் பரிசோதிக்க வேண்டும்.
மீண்டும் தொற்று ஏற்பட்டவர்கள், கரோனா தடுப்பூசிக்குப் பின் தொற்று ஏற்பட்டவர்கள், ஒரு நிகழ்ச்சியின் வாயிலாக சமுதாயத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குடும்பத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இக்கருவி மூலம் பரிசோதனை செய்ய வேண்டும்.
மேலும், தொற்றால் பாதிக்கப்படும் குழந்தைகள், சிறுவர்கள், நுரையீரல் பாதிக்கப்பட்டவர்கள், தீவிர பாதிப்பில் இருப்பவர்கள், சர்வதேசப் பயணிகள் போன்றவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் டெக்பாத் கருவி மூலம் பரிசோதனை செய்ய வேண்டும்.
கரோனா வைரஸில் உருமாற்றம் ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் மட்டுமே 3 மணி நேரத்தில் முடிவுகளாக வரும். அவ்வாறு சாத்தியக்கூறுகள் இருந்தால், அவற்றை சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில மரபணு பகுப்பாய்வு மையத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும். அங்கு 7 நாட்களில் ஒமைக்ரான் போன்ற உருமாறிய கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தப்படும்.
சாத்தியக் கூறுகள் இருப்பதாக கண்டறியப்பட்டவர்களை, மரபணுபரிசோதனை முடிவுகள் வரும்வரை கட்டாயமாக தனிமைப்படுத்தி வைக்க வேண்டும். இதேபோல, தனியார் மருத்துவமனைகளும் டெக்பாத் கருவியைப் பயன்படுத்தி பரிசோதனை மேற்கொள்ள லாம்.