ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் தொடர்பாக மேல்முறையீடு செய்வோம் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் அங்கம்மாள் காலனியில் உள்ள மாநகர, மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடம் இருந்து விருப்ப மனுக்களை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி பெற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
‘அம்மா மினி கிளினிக்கை’ திமுக அரசு மூட இருப்பதாக தகவல்வந்துள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். அதேபோல, அம்மா உணவகத்தில் உணவு பொருட்கள் குறைப்பு, பணியாளர்களின் எண்ணிக்கை குறைப்பு, சம்பளம் குறைப்பு போன்ற நடவடிக்கையையும் கண்டிக்கிறோம்.
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத்தை உயர்த்தி தர வேண்டும். பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கும், கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகளை அடுக்கி வைத்துஉள்ள விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
மழை வெள்ள பாதிப்பு குறித்து வெள்ளை அறிக்கை தயாரித்து, எவ்வளவு நிதி தேவையோ அதைமத்திய அரசிடம் மாநில அரசுகோர இருக்கிறது. அதிமுக சார்பில் நானும், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும் மத்திய அரசிடம், நிவாரணத் தொகையை வழங்க வலியுறுத்துவோம்.
சேலம் கருங்கல்பட்டியில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணத் தொகையை ரூ.15 லட்சமாக உயர்த்தி தர வேண்டும். காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமாக உயர்த்தி தர வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் அதிமுக தொண்டர்களின் கோயிலாகும். பொதுமக்கள் பார்த்து செல்லும் வகையில் அரசுடமையாக்கினோம். தற்போது, நீதிமன்றம் அரசுடமையை ரத்து செய்துள்ளது. நானும், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும் கலந்துபேசி மேல் முறையீடு செய்வோம். வரும் 1-ம் தேதி நடக்கும் செயற்குழு கூட்டத்தில் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளோம் என்றார்.