தமிழகம்

ஒரே வாரத்தில் 3 புதிய கட்சிகள் உதயம்

எம்.மணிகண்டன்

தேர்தலையொட்டி ஒரே வாரத்தில் 3 புதிய கட்சிகள் உதயமாகியுள்ளன. இதற்கிடையே 300-க்கும் அதிகமான சிறியக் கட்சிகள் பெரிய கட்சிகளின் பார்வைக்காக காத்திருக்கின்றன.

வழக்கம்போல இந்த சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டும் புதிய கட்சிகள் பல புற்றீசல் போல் வெளியே வர ஆரம்பித்துள்ளன. இதன்படி, இந்த தேர்தலுக்காக தொடங்கப்பட்ட முதல் கட்சி பச்சைத் தமிழகம். கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பைச் சேர்ந்த சுப.உதயகுமார் அதனைத் தொடங்கினார்.

இதையடுத்து, கடந்த ஒரே வாரத்தில் மட்டும் 3 புதிய கட்சிகள் உதயமாகியுள்ளன. மனித நேய மக்கள் கட்சியை உரிமை கொண்டாட முடியாது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த தமிமுன் அன்சாரிக்கு உயர் நீதிமன்றம் தடை விதிக்கவே, அவர் மனிதநேய ஜனநாயகக் கட்சி என்னும் அரசியல் கட்சியை சென்ற வாரம் தொடங்கினார். மனித நேய மக்கள் கட்சி அதிமுக கூட்டணிக்காக காத்திருப்பதால், திமுகவுடன் கூட்டணி அமைக்க தமிமுன் அன்சாரி ஆலோசனை நடத்தி வருகிறார்.

அப்துல் கலாமின் ஆலோசகராக இருந்த பொன்ராஜும், அப்துல் கலாம் இந்திய லட்சியக் கட்சி என்னும் கட்சியை கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கினார். அந்தக் கட்சி காந்திய மக்கள் இயக்கத்துடன் கூட்டணி வைத்துள்ளது.

தெலுங்கு செட்டியார்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா, திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம் என்னும் கட்சியை 2 தினங்கள் முன்பு தொடங்கினார் ஆரம்பம் முதலே அதிமுக ஆதரவாளராக இருந்து வந்த அவர், அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க விரும்புவதாக தெரிகிறது.

சமகவிலிருந்து நீக்கப்பட்ட எர்னாவூர் நாராயணன் எம்.எல்.ஏ, புதியக்கட்சி தொடங்குவது பற்றி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். இன்னும் ஒரு வாரத்துக்குள் அவர் அறிவிப்பை வெளியிடுவார் எனத் தெரிகிறது. கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பேதான் அதிமுகவை ஆதரிப்பேன் என்று அவர் அறிவித்துள்ளார்.

தேர்தல் நேரத்தில் புதிதாக கட்சி தொடங்கப்படுவது ஒருபுறமிருக்க, கட்சித் தொடங்கப்பட்டதற்கான சுவடு ஏதுமின்றி, 300-க்கும் அதிகமான கட்சிகள் புற்றீசல் போல் புறப்பட்டுள்ளன. கிறிஸ்தவ முன்னேற்றக் கழகம், தலித் மக்கள் முன்னணி, ராஜீவ் மக்கள் காங்கிரஸ், பாரதிய பார்வேர்டு ப்ளாக், அகில இந்திய தேசிய பார்வேர்டு பிளாக், விடுதலை விரும்பிகள் கட்சி, சோஷலிஸ்ட் ஜனதா, தமிழ்நாடு படித்த வேலையற்ற இளைஞர்கள் இயக்கம் உட்பட 300-க்கும் அதிகமான கட்சிகள் பெரிய கட்சிகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றன.

அதிமுக தலைமையகம், அண்ணா அறி வாலயம், கமலாலயம், தாயகம் ஆகிய இடங் களில் நூற்றுக்கணக்கான லெட்டர் பேட் கட்சி களும் படையெடுத்துள்ளன.

SCROLL FOR NEXT