பட்டரைபெரும்புதூர் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். உடன் சட்டத் துறை செயலாளர் கார்த்திகேயன், சட்டக்கல்வி இணை இயக்குநர் ச.சொக்கலிங்கம், கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி உள்ளிட்டோர். 
தமிழகம்

தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை: சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி உறுதி

செய்திப்பிரிவு

தமிழக நீதிமன்றங்களில் தமிழைவழக்காடு மொழியாக கொண்டுவருவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார்என்று சட்டத் துறை அமைச்சர்எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் அருகே பட்டரைபெரும்புதூர் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.இதில், தமிழக சட்டம், நீதி மன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று 506 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

அதுமட்டுமல்லாமல், 75-வது ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி பரிசு மற்றும் சான்றிதழ்களையும் வழங்கினார்.

விழாவில், சட்டத் துறை செயலாளர் கார்த்திகேயன், சட்டக்கல்வி இணை இயக்குநர் ச.சொக்கலிங்கம், கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்வில் அமைச்சர் பேசியதாவது: தமிழகத்தில் சட்டக்கல்விஅளிக்கும் வகையில் சென்னை அரசு சட்டக் கல்லூரி தொடங்கப்பட்டு, 130 ஆண்டுகள் ஆகின்றன. உயர் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள், சட்ட பேராசிரியர்கள், சட்ட வல்லுநர்களை உருவாக்கிய பெருமை இச்சட்டக் கல்லூரியை சாரும்.

டாக்டர் அம்பேத்கர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 1990-ல் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி என பெயர் சூட்டிய பெருமையும், இந்திய அளவில் தமிழகத்தில் 1997-ல் முதன்முதலில் சட்டப் பல்கலைக்கழகத்தை உருவாக்கிய பெருமையும், தமிழில் சட்டப் படிப்பை கொண்டு வந்த பெருமையும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை சாரும்.

ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அந்தந்த தாய்மொழியே வழக்காடு மொழியாக இருந்து வருகிறது. இதேபோல், தமிழகத்திலும் நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டுவர, தமிழக முதல்வர்மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இன்று பட்டம் பெற்ற மாணவர்கள் தாங்கள் கற்ற சட்ட அறிவை சரியான முறையில் பயன்படுத்தி வாழ்க்கை தரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT