கோப்புப் படம் 
தமிழகம்

ஜெயலலிதா பெயரை இருட்டடிப்பு செய்வதா?- டிடிவி.தினகரன் கண்டனம்

செய்திப்பிரிவு

மக்கள் நலத்திட்டங்களில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெயரை திமுக அரசு சத்தமில்லாமல் இருட்டடிப்பு செய்யும் வேலைகளை செய்வது கண்டனத்திற்குரியது என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

"மக்கள் நலத்திட்டங்களில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பெயரை இருட்டடிப்பு செய்யும் வேலைகளை சத்தமில்லாமல் தி.மு.க அரசு மேற்கொண்டு வருவது கடும் கண்டனத்திற்குரியது.

ஏழை,எளிய மக்கள் பசியாறுவதற்காக ஜெயலலிதா அவர்கள் கொண்டுவந்த அம்மா உணவகங்களை சீர்குலைப்பதற்கான வேலைகளை ஏற்கெனவே தொடங்கிவிட்ட திமுக அரசு, அவற்றை மொத்தமாக மூடுவதற்கு திட்டமிட்டு கருணாநிதி பெயரில் உணவகங்களை ஆரம்பிக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

ஒரு பக்கம் "ரொம்பவும்" அரசியல் நாகரீகம் வாய்ந்தவராக தன்னை காட்டிக்கொள்ள,'அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்' என முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், அவரது அரசு அதற்கு நேர் எதிராக செயல்படுகிறது.

இப்போது 'அம்மா மினி கிளினிக்'கையும் பெயர் மாற்றம் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த காழ்ப்புணர்ச்சி நடவடிக்கைகளை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை திமுக-வும் ஸ்டாலினும் மறந்துவிடக்கூடாது."

இவ்வாறு டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT